Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பறிபோன 14 வயது உயிர்: இன்னும் எத்தனை இளம் உயிர்களை இழக்கப் போகிறோம்?



மாணவர்களின் உளநலப் பாதுகாப்பில் பெற்றோரும் பாடசாலைகளும் விழிப்படைய வேண்டும் – தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் வலியுறுத்தல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, கல்வி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மற்றும் குறித்த பாடசாலை ஊடாகத் தொடர்புகொண்டு மாணவி தொடர்பாக  கேட்டறிந்து கொண்டதாக, கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் தெரிவித்தார்.

மாணவர்களின் உளநலப் பாதுகாப்பில் பெற்றோரும் பாடசாலைகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

இளம் வயதிலேயே இடம் பெறும் இத்தகைய துயரச் சம்பவங்கள், மாணவர்களின் உளநலப் பாதுகாப்பு தொடர்பில் நாம் இன்னும் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் அதேவேளை, அவர்களின் உணர்வுகள், மன அழுத்தங்கள், ஏமாற்றங்கள் மற்றும் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கையாளும் திறனையும் வளர்ப்பது அவசியமாகும்.

குறிப்பாக, மாணவர்களின் உளநலப் பாதுகாப்புக்குப் பொறுப்புடன் செயற்படும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பொருத்தமான பயிற்சிகளையும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை இனியாவது தீவிரப்படுத்த வேண்டும். மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், தீவிரமான மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல், அவர்களுக்குச் செவிசாய்த்து, தேவையானபோது உரிய நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மாணவர்களுக்கான உளநல விழிப்புணர்வுச் செயற்பாடுகள் போதியளவில் முன்னெடுக்கப்படாமை, இத்தகைய ஆபத்தான நிலைமைகளைத் தடுக்கத் தவறுவதற்கான முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கலாம். 

எனவே, ஒரு துயரச் சம்பவம் இடம்பெற்ற பின்னர் அதற்கான காரணங்களை ஆராய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், இத்தகைய விபரீதமான முடிவுகளைத் தவிர்ப்பதற்கான விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் முன்கூட்டியே வழங்குவது மிகவும் அவசியமாகும்.

“இன்னும் எத்தனை இளம் உயிர்களை இழந்த பின்னர் நாம் விழிப்படையப் போகிறோம்?” என்ற கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் தமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் பிரச்சினைகளைக் கேட்பதற்கும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்கள் அச்சமின்றி உதவி நாடக்கூடிய நம்பிக்கையான சூழலை உருவாக்குவதற்கும் பெற்றோர் முன்வர வேண்டும்.

மாணவர்களின் உளநலத்தைப் பாதுகாப்பது பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிர்வாகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தினரின் கூட்டுப் பொறுப்பாகும். 

எனவே, மாணவர்களின் உளநலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பயிற்சிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து, இளம் உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் மேலும் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பறிபோன 14 வயது உயிர்: இன்னும் எத்தனை இளம் உயிர்களை இழக்கப் போகிறோம்? Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.