மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஆசிரிய ஆலோசகர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்!
மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆலோசனைச் சேவைகளின் செயற்பாடுகள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் – தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ்.
இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைப் போலவே, அவர்களின் உளநலம், ஆளுமை வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் எதிர்காலக் கல்வித் தெரிவுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களின் உளநலம் மற்றும் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை மட்ட ஆலோசனைச் சேவைகள் எந்தளவிற்குச் செயற்படுகின்றன என்பது தொடர்பில் அவர் கவலை வெளியிட்டார்.
மாணவர் தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, பாடசாலைக் கல்வியை இடைநிறுத்துதல், கல்வி அழுத்தங்கள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் ஆசிரியர்–மாணவர் உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள் போன்ற விடயங்கள் தீவிர கவனத்திற்குரியவை.
இத்தகைய சம்பவங்களைத் தனித்தனியான நிகழ்வுகளாகப் பார்க்காமல், அவற்றுக்குப் பின்னால் உள்ள உளவியல், குடும்ப மற்றும் சமூகக் காரணிகளையும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
உயிரை குறிப்பாக, உயர்தரப் பாடத்தெரிவின்போது மாணவர்களின் விருப்பம், திறமை மற்றும் எதிர்கால இலக்குகளைக் கருத்தில் கொள்ளாமல் சில பெற்றோர்கள் தமது விருப்பங்களைப் பிள்ளைகள் மீது திணிப்பதும், சில மாணவர்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுவதும் அவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்கி, அவர்களின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற கல்விப் பாதையைத் தெரிவு செய்ய உதவுவது ஆசிரிய ஆலோசகர்களின் முக்கிய பொறுப்பாகும் என்றார்.
மேலும், மாணவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள், தொடர்ச்சியான பாடசாலை வருகையின்மை, தனிமைப்படுத்திக் கொள்ளுதல், கல்வி ஆர்வம் குறைதல் மற்றும் மனஅழுத்த அறிகுறிகள் போன்றவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு, உரிய ஆலோசனைகளையும் தேவையான நிபுணத்துவப் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஆசிரிய ஆலோசகர்கள் பெயரளவிலான பொறுப்பாளர்களாக இல்லாமல், மாணவர்கள் அச்சமின்றித் தமது பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய நம்பிக்கையான சூழலைப் பாடசாலைகளில் உருவாக்க வேண்டும். அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது பரீட்சைப் பெறுபேறுகள் மாத்திரமல்ல. அவர்களின் மனநலம், தன்னம்பிக்கை, தனித்திறமை, விருப்பம் மற்றும் பாதுகாப்பான வளர்ச்சிச் சூழலும் அதற்கு அடிப்படையானவை. ஒரு மாணவரின் மனக்குரலைச் சரியான நேரத்தில் செவிமடுப்பது ஒரு உயிரைக் காப்பாற்றக்கூடும்.
எனவே, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆசிரிய ஆலோசனைச் சேவைகளின் செயற்பாடுகள் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அவற்றின் செயல்திறன் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் பிரச்சினைகள் தீவிரமடைந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, அவை உருவாகும் ஆரம்ப நிலையிலேயே தடுப்பு மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் உளநலப் பாதுகாப்பு என்பது ஆசிரிய ஆலோசகர்களின் பொறுப்பு மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும்.
மாணவர்களின் குரல்களுக்குச் செவிசாய்த்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வுடன் அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஆசிரிய ஆலோசகர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 30, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 30, 2026
Rating:

கருத்துகள் இல்லை: