குடும்பஸ்தர் ஒருவர் கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் = கந்தசாமி பிரபு MP உடனடி கரிசனை
குடும்பஸ்தர் ஒருவர் கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் = கந்தசாமி பிரபு MP உடனடி கரிசனை - ஓமான் நாட்டிற்கு சென்ற மனைவியை கண்டுபிடித்து மீட்க துரித நடவடிக்கை – குழந்தைகள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு - கணவனுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார மற்றும் உளவியல் பிரச்சினைகளால் நிர்க்கதியான நிலையில் காணப்பட்ட குடும்பமொன்றின் துயரத்தைத் தீர்க்க தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
ஓமானுக்கு தொழில் நிமித்தம் சென்ற தனது மனைவியுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாதுள்ளதாகவும், அவர் அங்கு எவ்வாறான சித்திரவதைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இருக்கின்றார் என்பது தெரியாமல் தவித்து வருவதாகவும் , இதற்கிடையில் தான் குடியிருக்கும் வாடகை வீட்டிலிருந்தும் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதால், தனது பிள்ளைகளுடன் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டதாக கூறி நேற்று இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று தனது 2 பிள்ளைகளை அழைத்து வந்து அங்கிருந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டு கல்லடிப் பாலத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அங்கிருந்த மீனவர்களின் துரித மீட்பு நடவடிக்கை காரணமாக அவர் காப்பாற்றப்பட்ட
சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்தது -
வெறுமனே பார்த்து விட்டு கடக்காமல் ஒரு மக்களின் பிரதிநிதி என்ற பொறுப்புடன் அதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாகத் தனது முகநூல் ஊடாக அறிவித்திருந்தார். அத்துடன், உறவினர்கள் தன்னை அல்லது தனது அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஓமான் சென்ற குறித்த பெண்ணின் சகோதரி ஒருவர் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்கியதை தொடர்ந்து ஓமானில் உள்ள குறித்த பெண்ணை அடையாளம் கண்டு அவருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் துரித ஏற்பாடுகளைச் செய்த அதேவேளை, ஓமானில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஊடாகவும் தனிப்பட்ட ரீதியில் தகவல்களைத் திரட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஓமானில் தேசிய தின விடுமுறை காரணமாக அரச அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் தற்காலிக தாமதம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. இருப்பினும், குறித்த பெண்ணைக் கண்டறிந்து அவருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான மாற்று வழிகளிலும் முயற்சிகள் தொடர்கின்றன.
இதேவேளை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் தந்தையின் உடல்நலம் மற்றும் மனநல நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவரை மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் ஏனைய தேவையான மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நாளை நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் நிர்க்கதி நிலையில் அல்லல்படும் இந்த குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளை அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் தீவிர கரிசனை அடிப்படையில் இன்றைய தினம் தற்காலிக அடிப்படையில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு பெண் சிறுமி குறித்த தாயின் சகோதரியின் வீட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்ற நிலையில்,அந்த சிறுமியின் தொடர்ச்சியான பராமரிப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் வாரத்தில் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இவ்விவகாரத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், குறித்த பெண் வெளிநாடு சென்றமை தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோதச் செயல்கள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்தும் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார் .
தற்போதைய சூழலில் சமூக ஊடகங்களில் தங்களின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை வெளிப்படுத்த மாத்திரம் சமூக ஊடகங்களை பாவிக்கும் வேண்டும் என்று பிரமுகர்கள் மத்தியில் அங்கு வெளிப்படும் மக்களின் பிரச்சினைகளை உண்மையான துயரங்களை எதிர்கொள்பவர்களின் நிலைமையை உணர்ந்து உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய பொறுப்பாகும் - இதனை அடிக்கடி நடைமுறைப்படுத்தும் ஒருவராக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு திகழ்கிறார்.
அந்த வகையில், சமூக ஊடகத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட இந்த குடும்பத்தின் துயரத்தை அவதானித்து, அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து, வெளிவிவகார அமைச்சு, மருத்துவ மற்றும் குழந்தைகள் பராமரிப்பு ஏற்பாடுகள் எனப் பல்வேறு வழிகளிலும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் கந்தசாமி பிரபு எம்.பி அவர்களின் இந்தத் தலையீடு சமூகப் பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஓமானில் தொடர்புகளின்றி இருப்பதாகக் கூறப்படும் பெண்ணின் தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்தி, அவரைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதுடன், நிர்க்கதியான நிலையில் உள்ள குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுப்பதே இந்நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும்.
ஒரு குடும்பத்தின் கண்ணீரைத் துடைப்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினரின் மனிதாபிமான முயற்சிகள் உரிய தீர்வை எட்ட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
(ஊடகவியலாளர் அஸ்மி)
குடும்பஸ்தர் ஒருவர் கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம் = கந்தசாமி பிரபு MP உடனடி கரிசனை
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 25, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: