Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னாள் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளராக பதவி வகித்த அல்ஹாஜ் எச். எம். எம். அசனார் லெப்பை அவர்களது தன்னிலை விளக்கம்.


காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னாள் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளராக பதவி வகித்த அல்ஹாஜ் எச். எம். எம். அசனார் லெப்பை அவர்களது தன்னிலை விளக்கம்.


நான் இப்பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளராக  பல வருட காலங்கள் பதவி வகித்திருக்கின்றேன்.


இறுதியாக 2023 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நம்பிக்கையாளர் சபையிலும் அங்கம் வகித்து அதிலும் பொருளாளராக பதவி வகித்திருந்தேன்.


பொதுவாக எமது இந்த மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் நிதி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களுக்கென்று ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறை நடைமுறையில் இருக்கின்றது.


பள்ளிவாயிலுக்கான வருமானங்களின் பெரும் பகுதி பிற்திகதி இடப்பட்ட காசோலைகளாகவும் மிகுதி ரொக்கமாகவும் கிடைக்கும். எஞ்சியவை பணமாகக் கிடைக்கும். கிடைக்கும் பணம் வங்கியில் வைப்புச் செய்யப்படும். காசோலைகள் பள்ளிவாயலின் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டு உரிய திகதிகளில் வங்கியில் பைப்புச் செய்யப்படும். பள்ளிவாயலுக்கான வருமானங்கள் கிடைக்கப் பெரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்காக வேண்டி எம்மால் பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படுவது ஒரு வழமையான விடயமாகும்.


அதேபோன்று மேற் கொள்ளப்படும் செலவுகள் வவுச்சர் பதிவுகள் ஊடாக மேற்கொள்ளப்படும்.

பள்ளிவாயலைப் பொறுத்தவரையில் ஊழியர்களுக்கும் பள்ளிவாயலால் நன்கொடை வழங்கப்படும் நிறுவனங்களுக்கும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக குறித்த ஒரு திகதியில் வங்கியிலிருந்து தேவையான அளவில் மாத்திரம்  பணம் மீள் எடுக்கப்படும். அவைகளைக் கொண்டு அக்கொடுப்பனவுகள் மற்றும் மின்சார, நீர் கட்டணங்கள் செலுத்தப்பட்டு அவசர அவசிய சிறிய தேவைகளுக்காக சிறியதோர் தொகைப் பணம் கையிருப்பாக வைத்திருக்கப்படும். 

இந்த நடைமுறையே பல வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தவிர பாரியளவிலான நிதித் தேவைகள் ஏற்படுமிடத்து நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களைக் கொண்டு கூட்டங்கள் கூட்டப்பட்டு சகலரதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அவை கூட்டக் குறிப்பு புத்தகத்தில் பதியப்பட்டு சிலவேளை  மேலதிகமாக தேவைப்படுமிடத்து முஸ்லிம் கலாச்சார திணைக்களம், வக்பு சபை என்பவற்றின் அனுமதியோடு அத்தேவைகள் நிறைவேற்றப்படும். 

இவைகளின் போதான கொடுப்பனவுகள், செலவுகளை என்பவற்றை மேற்கொள்ள தயாரிக்கப்படும் வவுச்சர் பத்திரத்தில் காணப்படும்  தலைவர் என்ற இடத்தில் தலைவர் அல்லது அதற்குப் பதிலீடானவர் கையெழுத்திடாமல்  ஒரு போதும் என்னால் பணம் வழங்கப்படுவதில்லை. 


இந்நிதி சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் நாளேடு கணக்குப் புத்தகத்திலும் லெஜர் புத்தகத்திலும் முறையாக எழுதப்படுவது கணக்குப்பதிவில் எமது முக்கிய அம்சமாகும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் மாதாந்த கணக்குகள், ஐந்தொகை என்பன  தயாரிக்கப்பட்டு அவை ஜமாஅத்தார்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுவதோடு பள்ளிவாயல் காரியாலயக் கோப்பில் ஒரு பிரதியும் இன்னும் ஓர் பிரதி முஸ்லிம் கலாச்சார திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். இது எமது வழமையான நடவடிக்கைகளாகும்.


கடந்த வருடம் ((2025) எமது நம்பிக்கையாளர்  சபைப் பொறுப்பை விசேட நம்பிக்கையாளர் சபைனரிடம் ஒப்படைத்தபோது 2023 ம் ஆண்டில் நாம் நம்பிக்கையாளர் சபையைப் பொறுப்பேற்ற போது நம்பிக்கையாளர் சபை சார்பாக நான் பொறுப்பேற்ற நிதிசார் கணக்கு மீதியினை ஆரம்ப மீதியாகக் கொண்டு மேல் விபரித்த எமது கணக்கியல் நடைமுறையின் பிரகாரம் வரவு செலவுகளை மேற்கொண்டு எமது இறுதி கணக்கறிக்கை மற்றும் நிதி வடிவங்களையும் ஒப்படைத்தேன். 


இவ்விரண்டு வருட கால கொடுக்கல் வாங்கல் மற்றும் கணக்குப்பதிவியல் என்பன என்னால் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் செய்யப்பட்டவையே. அவற்றில் எவ்வித முறைகேடுகளும் ஏற்பட்டது இல்லை. அதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை. அதற்கான எந்தத் தேவையும் எனக்கோ நான் சார்ந்த நம்பிக்கையாளர் சபையினருக்கோ இருந்ததில்லை. இது எங்கள் அனைவரதும் நிலைப்பாடாகும்.


தற்போது கூறப்படும் கணக்காய்வின் நிதிக்குறைவு பற்றி நான் கூறுவதாயின் அது கணக்காய்வில் ஏற்பட்ட ஒரு குறைபாடு என்றே கூற வேண்டியுள்ளது. அது பல்வேறு வகைகளில் நிகழ்ந்திருக்கலாம்.  அவ்வாறான நிதிக்குறைவொன்று தோன்றுவது பற்றி நாளாந்தம் ஐந்து நேரமும் தொழுகைக்காக வரும் என்னிடம் கணக்காய்வினை மேற்கொண்டவர்கள் கேட்டிருந்தாள் அதனை நான் தெளிவுபடுத்தி இருப்பேன். 


தற்போது இக்கணக்காய்வறிக்கை முஸ்லிம் கலாச்சாரத் திணைக்கள கணக்காளரினால்  ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பதால் சிலவேளை அது பற்றிய தெளிவை வழங்குமாறு நாங்கள் கோரப்படலாம். அப்போது அவைகள் பற்றிய தெளிவை இன்ஷா அல்லாஹ் நாங்கள் வழங்குவோம். 


இதை விடுத்து தங்கள் பாட்டுக்கு என்ன நடந்துள்ளது என்று தெரியாமல் தடியெடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் என்ற தோரணையில் கணக்காய்வு சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவித்து, குழப்பங்களுக்கு வழி வகுத்து  எம்மை விமர்சித்து  மட்டுமல்லாமல்  தொடர்ந்தும் விமர்சிப்பதைத் தொடர்ந்து  கொண்டிருப்பவர்கள் கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்தியவர்களின் இறுதி நிலைமைகள் எவ்வாறு கழிந்தன என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும் என இவ்விடத்தில் பொறுமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.


இவ்விடயத்தில் எதிர்கால சமூகத்திற்கு தங்களை உதாரணமாகக் கூறுவதை விட்டும் இறைவன் பாதுகாக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன். 


அதே வேளை இக்கணக்காய்வு தொடர்பான இறுதி முடிவு வெளியாகும் வரை ஜமாத்தார்கள் பொறுமை காக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். வஸ்ஸலாம்

இவ்வண்ணம்.
அல்ஹாஜ் 
எச்.எம்.எம்.அசனார் லெப்பை
(முன்னாள் பொருளாளர்)
07.11.2026
காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் முன்னாள் நம்பிக்கையாளர் சபையின் பொருளாளராக பதவி வகித்த அல்ஹாஜ் எச். எம். எம். அசனார் லெப்பை அவர்களது தன்னிலை விளக்கம். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 07, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.