ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “எதிர்கால நடவடிக்கைக்கான மூலோபாய திட்டமிடல்” விசேட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “எதிர்கால நடவடிக்கைக்கான மூலோபாய திட்டமிடல்” என்ற தொனிப்பொருளில், கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் செயலமர்வு இன்று (15/11/2026) கொழும்பு டங்கன் வைட் (Duncan White) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கட்சியின் நாடளாவிய ரீதியிலான மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற இச்செயலமர்வில், கட்சியின் தற்போதைய அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான செயற்பாடுகள், மக்கள் பிரதிநிதிகள் எதிர்நோக்கும் சவால்கள், அவர்களது கருத்துக்கள் மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதன் போது, கட்சியின் எதிர்கால அரசியல் பயணத்தை வலுப்படுத்துதல், அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளும் முன் மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும், கட்சியின் நலனைக் கருத்திற்கொண்டு தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர பிதாவுமான எம்.எஸ். நளீம் சாலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோருக்கு கட்சியின் சார்பில் கௌரவம் வழங்கப்பட்டது.
அதேபோன்று, கட்சியின் நலனைக் கருத்திற் கொண்டு தமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்த கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் ரிபான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-- ஊடகப்பிரிவு.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “எதிர்கால நடவடிக்கைக்கான மூலோபாய திட்டமிடல்” விசேட கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2026
Rating:


















கருத்துகள் இல்லை: