Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கண்மூடித்தனமான ஆதரவு-கண்மூடித்தனமான எதிர்ப்பு, இந்த இரண்டுமே அரசியலில் ஆபத்தானவைகள் தான்!


எதனைப் பாராட்டுவது? எதனை கண்டிப்பது? எப்போது பாராட்டுவது? எப்போது கண்டிப்பது?

"நல்லவற்றை செய்யும்போது பாராட்ட முன் வராதவர்கள் ஒரு சில தவறு நடக்கும் போது மட்டும் விமர்சனம் செய்ய வந்து விடுகிறார்கள் ..."

ஆட்சியாளர்கள் தொடர்பில்  விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிற போது, ஒரு சிலரால் பரவலாக முன் வைக்கப்படும் பதில் விமர்சனம் இதுதான். 

ஒரு அரசாங்கம் அல்லது ஆட்சியாளர்களை பொறுத்தளவில் எதனை பாராட்டு வேண்டும்? எப்போது பாராட்ட வேண்டும்? எதனை கண்டிக்க வேண்டும்? எப்போது கண்டிக்க வேண்டும்? என்கின்ற தெளிவீனத்தின் விளைவே இதுவாகும்.

இரண்டு உதாரணங்கள் மூலம் இதனை புரிந்து கொள்ள முயல்வோம்.

உதாரணம் 1:
ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது. அங்கு பல வைத்தியர்கள் கடமையில் இருக்கிறார்கள். பொதுமக்கள் பணத்தில் மருந்து செலவுகளும் வைத்தியர்களின் சம்பளமும் வழங்கப்படுகிறது. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அங்கே வைத்தியம் நடக்கிறது. மக்களுக்கு கிடைக்கும் நோய் நிவாரணத்தின் பெறுமதி என்பது அவர்கள் வழங்கும் நிதிப் பங்களிப்பை விட மிக மிக பாரியது. இருந்தாலும், நாளாந்தம்  நடக்கின்ற வைத்தியத்திற்காக  நோயாளிகளோ அல்லது ஏனையவர்களோ நாளாந்தம் அந்த வைத்தியர்களை பாராட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனாலும்,  பல நூறு வைத்தியங்கள் சரியாக நடைபெற்ற போதிலும் ஒரு இடத்தில் தவறு நடந்து விடுகின்ற போது..  அது ஒரு வைத்தியரின்/வைத்திய சாலையின் முறைகேடு அல்லது கவன ஈனம் அல்லது துஷ்பிரயோகம் என கண்டறியப்படுகிறத போது.. அது பாரிய கண்டனத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகிறது.
அவ்வாறு கண்டிப்பது மக்களின் கடமையும் கூட.

 இந்த சூழ்நிலையில்,  நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு நாளாந்தம் வைத்தியம் செய்த போது பாராட்டாதவர்கள் இப்போது இந்த ஒரே ஒரு தவறை மட்டும் கண்டிக்கிறார்கள் என  நொந்து கொள்வது எப்படி நியாயமாகும்?

அதேவேளை,  தமது கடமையினையும் தாண்டிய ஒரு சேவையினை ஒரு வைத்தியர்/ ஆஸ்பத்திரி செய்துவிட்டால் அதனை பாராட்டியே ஆக வேண்டும்.  

உதாரணமாக,  தனக்கு கடமையில் இல்லாத நேரத்திலும் கூட ஒரு அவசர சத்திர சிகிச்சையை மேற்கொண்டு ஒருவரின் உயிரை காப்பாற்றி விட்டால் அந்த வைத்தியரின் சேவை கண்டிப்பாக பாராட்டுக்குரியதே. 

உதாரணம் 2:
ஒரு பாடசாலை இருக்கிறது. அந்த பாடசாலையில் போதிப்பதற்கென ஒரு பாட விதானம் இருக்கிறது. அதற்குரிய ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள். நாளாந்தம் உரிய நேரத்தில் உரிய பாடங்களை நடத்துவதும் உரிய காலத்தில் பாட விதானங்களை முடித்து பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதும் அவர்களது அடிப்படை கடமையாகும். இதனை நாளாந்தம் ஆசிரியர்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதனை ஒரு நாளும் மாணவர்களும் பெற்றோர்களும் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை. அதேவேளை.. ஒரு ஆசிரியர் தன் கடமையை செய்ய தவறி விட்டால் அல்லது துஷ்பிரயோகம் ஒன்றை செய்து விட்டால் அது பாரிய கண்டனத்துக்குரியதாகும். இது கண்டிக்க பட்டே ஆக வேண்டும். 
"இத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு நாளாந்தம் கற்பிக்கிறோம்.. இதனை நீங்கள் பாராட்டவில்லை.. இப்போது ஒரு ஆசிரியர் செய்த தவறை கண்டிக்கிறீர்களே.." என யாரும் கூற முடியாது.

அதேவேளை, தமது கடமையினையும்  தாண்டி சேவை செய்து மாணவர்களை பயிற்றுவித்து உயர் அடைவுகளை ஒரு பாடசாலை அல்லது ஒரு ஆசிரியர் கொடுத்துவிட்டால் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். சொந்த கோபதாபங்களுக்காக யாரும் அதில் பின்னிற்கக் கூடாது.

ஆட்சியாளர்களை பொறுத்தளவில்,  அவர்களுக்கென நியமிக்கப்பட்ட கடமைகள் ஏராளமாக இருக்கின்றன.  அவர்கள் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளும் அவர்களது கடமையாக மாறுகிறது. மக்களே அவர்களுக்கான அனைத்து நிதிகளையும் தமது 'வாயைக் கட்டி வயிற்றை கட்டி' வழங்குகிறார்கள்.

ஆக, 
நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால்...தமது அடிப்படை கடமையை செய்தமைக்காக அல்லது தமது அடிப்படை வாக்குறுதிகளை நிறைவேற்றியமைக்காக ஆட்சியாளர்களை ஒவ்வொரு குடிமக்களும் பாராட்ட வேண்டியது கடமையும் அல்ல கட்டாயுமும் அல்ல 

 ஆனால், ஆட்சியாளர்கள் தமது வாக்குறுதியை மீறி நடக்கும்போது.. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது... அல்லது பொய்களைக் கூறி தமது தவறுகளை மூடி மறைக்க முயலும் போது போது.. அதை கண்டித்தேயாக வேண்டும். அது மக்களின் அடிப்படை கடமை மட்டுமல்ல அதுவே மக்களுக்கு பாதுகாப்பானதும் ஆகும்.

அதே நேரம் தனது வாக்குறுதிகளையும் தாண்டி.. தனது கடமைகளையும் தாண்டி.. ஒரு காரியத்தை ஆட்சியாளர்கள்  செய்கிற போது அதனை பாராட்டுவதற்கும்  பின்னிற்கக் கூடாது. 

தமது சொந்த விருப்பு வெறுப்புகள் அல்லது கோபதாபங்கள் காரணமாக
இந்த சமநிலை அணுகுமுறை யில் பலரும் பல சந்தர்ப்பங்களில் சறுக்கி விடுகிறார்கள் என்பதுதான் கசப்பான ஒரு உண்மையாகும்.


கண்மூடித்தனமான ஆதரவு-கண்மூடித்தனமான எதிர்ப்பு, இந்த இரண்டுமே அரசியலில் ஆபத்தானவைகள் தான்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.