வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும் – தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ்
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும் – தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ்
வீதிப் போக்குவரத்து விபத்துக்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உலக தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு, வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதுடன், விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவு வழங்கும் நோக்கில், வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ் தெரிவித்தார்.
இத்தினத்தை முன்னிட்டு மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த தினத்தை நினைவுகூர்ந்து வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உளசமூக ஆதரவை வழங்குவதுடன், விபத்துக்களால் உடல் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கு வாகனச் சாரதிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரும் வீதி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், பொறுப்பான வீதிப் பயன்பாடு தொடர்பிலும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
குறிப்பாக, வாகனம் செலுத்தும்போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தாமை, வேகக் கட்டுப்பாட்டைப் பேணுதல், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்புப் பட்டி போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்துதல், போக்குவரத்துச் சமிக்ஞைகளையும் வீதி ஒழுங்குகளையும் மதித்துச் செயற்படுதல் போன்ற விடயங்களில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
அதேபோன்று, சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பாதசாரிகளின் பாதுகாப்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். பாதசாரிக் கடவைகள், பாடசாலைச் சூழல்கள் மற்றும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வீதிப் பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
வீதி விபத்துக்கள் என்பது ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ மாத்திரம் பாதிக்கும் சம்பவமல்ல. அது குடும்பங்களின் வாழ்வாதாரம், பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனையும் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகும்.
எனவே, விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுடன், விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தொடர்ச்சியான மனிதாபிமான மற்றும் உளசமூக ஆதரவை வழங்குவதும் முக்கியமானதாகும்.
மேலும், வீதி விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய சமூகத்தின் அணுகுமுறை கருணையுடனும் புரிந்துணர்வுடனும் அமைய வேண்டும். விபத்துக்குப் பின்னர் உடல் ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் ரீதியான அதிர்ச்சி, அச்சம், மன அழுத்தம் மற்றும் வாழ்வியல் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கும் உரிய ஆதரவும் வழிகாட்டலும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வீதிப் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு வீதிப் பயன்பாட்டாளருக்கும் உள்ள சமூகப் பொறுப்பாகும். தனிநபர் ஒழுக்கம், விழிப்புணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் பொறுப்பான செயற்பாடு ஆகியவற்றின் ஊடாகவே வீதி விபத்துக்களைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
இதனை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் பாடசாலைகள், கிராம மட்டங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விழிப்புணர்வை முன்னெடுக்க வேண்டும் – தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸ்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 20, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 20, 2026
Rating:

கருத்துகள் இல்லை: