“வீட்டுக்கு வீடு தொழிற்கல்வியைக் கொண்டு செல்வோம்” தேசிய வேலைத்திட்டம் நவம்பர் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு
கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவினால் முன்னெடுக்கப்படும் வீட்டுக்கு வீடு தொழிற்கல்வியைக் கொண்டு செல்வோம்” (Door to Door Skill Campaign) எனும் தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த பின்னர், எவ்விதமான மேலதிகக் கல்வி, தொழிற்கல்வி அல்லது வேலைவாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் மாணவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் வயது வந்தோரை தொழிற்கல்வியுடன் இணைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவின் பொறுப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டம், கிராம மட்டத்தில் பிரஜாசக்தி குழுக்களின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் நாட்டின் தொழில்துறைக்குத் தேவையான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதுடன், தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வலுச்சேர்ப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், திருகோணமலை மாவட்டத்திலும் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள கிராமங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி குழுக்கள் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் இணைந்து வீடு வீடாகச் சென்று தொழிற்கல்வியைத் தொடர ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் ஏனைய தகுதியுடையவர்களை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக தொழிற்கல்வி வாய்ப்புகளை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்று, திறன்மிக்க தொழிலாளர் படையணியை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றுகின்ற திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் தொழிற்கல்வி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் க.மதுரன் அவர்களையும் தொடர்பு கொள்ள முடியும்.
தொலைபேசி இலக்கம்:- 0768178341
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 19, 2026
Rating:

கருத்துகள் இல்லை: