Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையில் ஏற்றப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்தவை. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு


(எம்.எல்.எஸ்.முஹம்மத்)

சுகாதார அறிக்கையிடல் தொடர்பில் விடியல் இணையத்தளம் ஊடகவியலாளர்களுக்கு நடாத்திய இணையவழி செயலமர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

இதில் வளவாளராக கலந்துகொண்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க ஊடகக் குழுவின் உறுப்பினரான வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் கொவிட் தடுப்பூசி தொடர்பில் முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு.

கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிராக இலங்கையில் ஏற்றப்படும் அனைத்து தடுப்பூசிகளும் தரம் மிக்கவையாகும். இவை அனைத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த தடுப்பூசிகள்; அனைத்தும் மிகச்சிறந்த பெறுபேறுகளை வழங்கியுள்ளன. அதனால் இந்த தடுப்பூசிகளின் தரம் தொடர்பில் நாம் எவரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை.

உங்களுக்கு முதலில் கிடைக்கின்ற தடுப்பூசியே மிகச்சிறந்த தடுப்பூசி எனக் கருதுங்கள். எனினும், இந்த தடுப்பூசிகள் தொடர்பில் பொதுமக்கள் உட்பட சமூகத் தலைவர்கள் சிலர் மத்தியிலும் பல முரண்பாடான கருத்துக்களை அவதானிக்க முடிகிறது.

அத்துடன் சமூக வலைதளங்கள் ஊடாகவும் கொவிட் தடுப்பூசிகள் தொடர்பில் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருவதையும் நாம் அறிகிறோம். எமது நாட்டின் ஊடகங்களும், பொறுப்புமிக்க ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்த விடயம் தொடர்பில் மிக நேர்மையுடன் பணியாற்றுகின்றனர்.

கொவிட்-19 வைரஸின் தாக்கம் காணப்படும் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டமைக்கு சுகாதார அமைச்சின் கீழுள்ள தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தவறான செயற்பாடுகளே காரணமாகும்.

எனினும், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஓரளவு திருப்திகரமாகவுள்ளது. மொத்த சனத்தொகையில் 70 சதவீதத்தினர் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர். அத்துடன் 25 சதவீதத்தினர் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

உலகில் 58 நாடுகளில் கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படாத நிலையில், எமது நாட்டின் முன்னேற்றம் தொடர்பில் நாம் திருப்தியடைய வேண்டியுள்ளது.

எனினும், அன்றாடம் நிகழும் கொவிட்-19 மரணங்கள் தொடர்பில் நாம் மிகக்கூடுதலாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். தினமும் நிகழும் மேற்படி மரணங்களில் 75 சதவீதத்தினர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஆனால், அவ்வாறு மரணிப்பவர்களில் 90 சதவீதத்தினர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எமது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இது தொடர்பில் எமது முன்மொழிவுத் திட்டத்தை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சமர்ப்பித்தோம்.

எமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். இதற்கிணங்க நாட்டின் மொத்த சனத்தொகையில் 2.7 மில்லியனாக காணப்படும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தால் இன்று பல மரணங்கள் நிகழாதிருந்திருக்கும்.

எவ்வாறாயினும், எமது ஆலோசனைகள் எதனையும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. அவர்களிடம்  தடுப்பூசி வழங்குவது பற்றிய முறையான திட்டமிடல்கள் எதுவும் இருக்கவில்லை.

அவர்களின் பொறுப்பிலுள்ள எந்தவொரு நடவடிக்கையும் இப்போது இடம்பெறுவதில்லை. கொரோனா வைரஸின் திரிபுகள் மற்றும் அதன் மாற்றங்கள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு விளக்கமளிக்கமளிக்க வேண்டிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இன்று மௌனமாக இருக்கின்றது. இவையனைத்தும் இந்தப் பிரிவின்  வினைத்திறனற்ற செயற்பாடுகளையே பிரதிபலிக்கின்றன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தில் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவினர் உட்பட பொதுமக்களாகிய மூன்று தரப்பினரதும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் கூட்டிணைப்பும் மிகவும் அவசியமாகும்.

எமது நாட்டில் இந்த வேலைத் திட்டம் வெற்றி பெறாமைக்கு பல முக்கிய காரணிகள் உள்ளன. சுகாதார துறையின் பிரதானி மக்கள் முன்னிலையில் பேசமறுக்கின்றார். அரச தரப்பினரின் தலையிடிகளும் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறுகின்றனர். இவ்வாறான தவறுகளை எதிர்காலத்தில் திருத்திக் கொண்டு  பயணிக்போமானால் ஆரோக்கியமான இலங்கையை விரைவில் கண்டுகொள்ளலாம்.

இலங்கையில் ஏற்றப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் அனைத்தும் சர்வதேச தரம் வாய்ந்தவை. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 04, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.