Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பு வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு வலயத்திலிருந்தும் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகள் குறித்து தேடியறிந்து அவற்றுக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் கல்விசார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக (02) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாடசாலைகள் அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை,இடநெருக்கடி, வகுப்பறைகள் தட்டுப்பாடு,சிங்கள மூலம் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் இன்மை,அதிகமாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பாடசாலைகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதோடு அவர்களுக்கு இஸ்லாம் பாடம் கற்பிக்க ஆசிரியர் இன்மையினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. கொழும்பிலுள்ள 19 முஸ்லிம் பாடசாலைகளில் சுமார் 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அதிபர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதோடு அவற்றை தீர்ப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. உயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு இரு வருட பயிற்சி வழங்கி நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பில் சில பிரதேசங்களில் முஸ்லிம் பாடசாலைகள் இன்மையால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்வது குறித்தும் சில பாடசாலைகளில் இடவசதி,மைதானவசதி இன்மை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. சில பாடசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உகந்த காணியை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

இடவசதி குறைபாட்டிற்கு தீர்வாக புதிய பாடசாலை கட்டிடங்களை நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் நிர்மாணிப்பதில் உள்ள தடைகளை தீர்ப்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

கலந்துரையாடலில் தெரியவந்த சில பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, முஸ்லிம் பாடாசலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் போது அறிவித்தார்.

இதன்போது உயர் தரம் கற்க தெரிவாகியிருக்கும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, மேல்மாகாண கல்வி அதிகாரிகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள், நகர பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


கொழும்பு வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதி பணிப்பு Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 03, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.