தலைவர்கள் சோரம் போனால் கட்சிகள் அழிந்து போகும் அற்ப சொற்பங்களுக்காக அடிப்படைகளை மறக்க முடியாது - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
தலைவர்கள் சோரம் போனால் கட்சிகள் அழிந்து போகும். அற்ப சொற்பங்களுக்காக அடிப்படைகளை மறக்க முடியாது - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்,31 ஆவது பேராளர் மாநாடு கடந்த 22 ஆம் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.
தொகுப்பு - லயானா மஹ்தியா காளிமுத்து
அன்புக்குரிய பேராளர்களே,
ஆரம்ப காலத்தில் இருந்த இந்த இயக்கத்தின் பூர்வீகம் குறித்த ஒரு பிரக்ஞை எங்களுக்கு மத்தியில் இல்லாமல் போய் விட்டது என்பதுதான் இன்று எங்கள் அனைவருக்கும் இருக்கின்ற கவலை. ஒரு சாதாரணமான தியாகத்தினால் வளர்ந்த கட்சி அல்ல இது. நிறைய உயிர் தியாகங்களினால் வளர்ந்த கட்சி. இந்த இயக்கம் வாழ வேண்டும் என்பதற்காக. நிறையப்பேர் இரத்தம் சிந்தி யிருக்கின்றார்கள். இந்த காத்தான்குடியில், ஏறாவூரில், ஓட்டமாவடியில், வாழைச்சேனையில், காரைதீவில் என்று பல இடங்களில் கொத்துக் கொத்தாக முஸ்லிம்கள் கொலையுண்டது இந்த இயக்கத்தின் தோற்றம், தங்களின் போராட்டத்துக்கு அச்சுறுத்தலாக வந்து விடுமோ என்கின்ற அச்சத்தின் காரணமாகத்தான்.
அதனால் நிறைய நாங்கள் இழந்திருக்கின்றோம். உடமைகளை இழந்திருக்கின்றோம் உயிர்களை இழந்திருக்கின்றோம். ஆனால் இன்று பதவிகள் என்ற விடயங்களுக்காக ஆள் மாறி ஆள் மாறி சண்டை பிடிக்கின்ற, மிக மோசமாக பிணக்குகளில் ஈடுபட்டு எங்களுக்கு நாங்களே சேற்றை வாரிப் பூசி கொள்கின்ற ஓர் அவலட்சணமான நிலைக்கு இந்த இயக்கம் வந்து விட்டது என்பதான ஓர் ஆத்திரம் பேராளர்கள் மத்தியிலும் வெளிபடுகிறது என்பதை பார்க்கின்ற போது, அதையிட்டு நாம் கொஞ்சம் அச்சம் கொள்ள வேண்டும்.
இங்கு நான் நிறைய பேராளர்களின் பேச்சுகளையெல்லாம் குறிப்பெடுத்தேன். அவர்களின் குரலில் தொனித்த ஆத்திரம், ஆவேசம் இந்த மண்ணில் இருந்துதான் எங்களது பாதுகாப்பு உறுதி படுத்த வேண்டும் என்ற நிலைமை இருக்கின்ற போது, அந்த பொறுப்பை தாங்கி நிற்கின்ற நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று தான் எதிர் பார்க்கின்ற விடயத்தை அவர்கள் சொன்ன போது, இந்த அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. அதன் உள் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாமானியமான ஒரு விடயம் அல்ல. இந்தப் பொறுப்பு மிகவும் பாரதூரமானது. எனவேதான் கடந்த காலங்களை பற்றி இனி தொடர்ந்தும் பேசி, பேசி கடந்த கால தவறுகளுக்கு வருந்துகின்றவர்களாக அன்றி, வருங்காலத்தில் எந்த தவறுகளும் இல்லாமல் இருக்க வேண்டும்.
இங்கு ஒவ்வொருவரினதும் பேச்சிலும் தொனித்த விவகாரங்கள் எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளின் பாரதூரம் சம்பந்தமாக மிக கூடிய அவதானிப்புடன் இந்த பேராளர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைச் சொல்லுகின்றது
கடந்த காலங்களைப் பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த ஆர்வமும் கிடையாது. இனி நடக்கவிருக்கும் விடயங்களை பற்றிதான் பேச வேண்டும். பேராளர்களுக்கு தைரியம் ஊட்ட வேண்டும். இந்த இயக்கம் ஒரு வெற்றி பாதையை மிக வீரியத்துடன் வடிவமைத்து கொள்வதற்கு தயாராகின்றது என்ற உணர்வோடுதான் பேராளர்கள் போக வேண்டும்.
நேற்றைய (21)"டெய்லி மிரர்" பத்திரிகையைப் பார்த்தேன். அதில் கூறப்படுபவர் எனது விருப்பத்துக்கு உரியவர் அல்லர் ; என்றாலும், சொல்லியிருக்கின்ற விடயத்தைப் பார்த்ததும் எனக்கு ஓர் அபிமானம் வந்தது. "இவர் மேல் அபிமானமா ?"என்று நீங்கள் கொஞ்சம் முகம் சுழிக்கலாம்.அவர் வேறு யாரும் அல்லர். ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ. அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் துணிச்சலோடு சொன்ன விடயம் தன்னுடைய கட்சி காரர்களில் ஒரு சிலர் தாங்களாகவே ஒரு முடிவை எடுத்து அதைதான் கட்சி செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்கு அவர் சொன்ன கருத்துதான் தலைப்புச் செய்தியாக வந்திருக்கின்றது."உங்களுக்கு நாங்கள் ஒரு தடவை தேவையில்லை என்றால் ,எங்களுக்கு நீங்கள் 100 தடவை தேவையில்லை" என்று பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கூறி இருக்கிறார் . கட்சி தலைவர்கள் சோரம் போக முடியாது. எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைதான் நானும் சொல்லுவேன். தலைவர்கள் சோரம் போனால் கட்சிகள் அழிந்து போகும். எனவே இந்த தலைமை அதிகாரத்துக்கு அடி பணிகின்ற தலைமையாக இருக்க மாட்டாது என்ற விடயத்தை மிக தெளிவாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். அச்சுறுத்தி அடி பணிய வைக்க முடியாது, ஆர்ப்பரித்து அடி பணிய வைக்க முடியாது. ஆட்களைப் பறித்து வைத்து கொண்டு அடி பணிய வைக்க முடியாது. அது நடக்காது என்று பசில் ராஜபக்ஷ சொல்கிறார்.
கட்சியை எவ்வாறு கையாள வேண்டும் என்று நாட்டு தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டு தலைவர் கட்சி தலைவர்களை துச்சமாக மதிக்கின்ற போது, தலைவர்களும் அவர்களை துச்சமாகதான் மதிப்பார்கள். இதுதான் முக்கியமான விடயம்.
எனவே இந்த விவகாரம் சம்பந்தமாகத்தான் இன்று எங்களுக்குள் நிறைய கேள்விகளும் பிரச்சினைகளும். ஆனால் நாங்கள் இவற்றையெல்லாம் தூக்கி வைத்து விட்டோம்.
இனி நாங்கள் எதையும் பேசுவது கிடையாது. எல்லோரும் ஓர் உறுதியான சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கின்றோம். தலைமையோடும், கட்சியோடும் பிணக்கில்லாம் பயணிப்பது என்கின்ற தீர்மானம், அந்த தீர்மானத்தை உறுதிமொழியாக எழுத்தில் தந்திருக்கின்றோம். பேராளர்களுக்கு முன்னால் சத்திய வாக்காக "பைஅத் "ஆக செய்திருக்கின்றோம்.
அதை நாங்கள் செயல் படுத்துவதன் மூலமாகத்தான் இந்த இயக்கத்தை வீரியமாக வாழ வைக்க முடியும். இது குறுகிய அரசியல் நலன்களுக்கு அப்பாற் பட்ட விடயம். "நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் ; பிரிந்து விடாதீர்கள் "என அல்லாஹ் மிக அழுத்தமாகச் சொல்கின்றான். எனவே பிரிவில்லாத ஒரு பயணத்தைதான் இந்தப் பேராளர்கள் எதிர் பார்க்கின்றார்கள். அதுதான் எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தார்மீகப் பொறுப்பு. அந்த பொறுப்பை செயல்படுத்துகின்ற உறுதியோடு இங்கு பதவி பிரமாணம் செய்த அரசியல் அந்தஸ்த்தில் இருக்கின்ற, இல்லாத அனைவரும் ஒரு சேர இந்த இயக்கத்தை பாதுகாக்கின்ற, இந்த இயக்கம் யாருக்கும் சோரம் போகாமல் இந்த நாட்டின் ஜனநாயகத்துக்காக, இந்த நாட்டின் ஊழல்களுக்கு எதிராக, இந்த நாட்டின் வருங்கால சமூதாயம் எதிர் பார்க்கின்ற நேர்மையான நீதமான அரசியல்களுக்காக போராடுகின்ற ஓர் இயக்கமாக நாம் வடிவமைக்க வேண்டும். அதற்காக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக வந்தது. பலரும் பேசினார்கள். பலவிதமாகப் பேசினார்கள்.
இங்கு மூதூரில் இருந்து வந்த நிஸாம் என்ற சகோதரர் “மூதூரில் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் மாநாடு ஒன்றை நடத்துங்கள்” என்று இங்கு ஆணித்தரமாகப் பேசினார். ஏனெ ன்றால் இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இருந்து தூரப்பட்டு போகின்றார்கள். அவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்பது இங்கு பேசிய பலருடைய கோரிக்கையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக புதிய தலைமுறையினர், இந்த கட்சியின் வரலாறு தெரியாது, இந்த கட்சியின் மரபு தெரியாது, இந்த கட்சியின் நோக்கம் அடிப்படை பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்ற பின்னணியில் ஏதோ கட்சியின் உறுப்பினராக இருந்த தங்களின் பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள். தங்களின் அயல் வீட்டு காரர்கள் என்று கேட்டறிந்து கொண்டு இன்னும் அபிலாசையோடு இந்த இயக்கத்தை பாதுகாப்பதற்கு ஒரு பெரிய இளைஞர் படை இந்த கட்சிக்கு இல்லாமல் இல்லை. அவர்களுக்கான அங்கீகாரம் குறைந்த பட்சம் இந்த பேராளர் மாநாட்டிலாவது கிடைக்கின்றதா என்று பார்த்தால் அது அரிதிலும் அரிதாக இருக்கின்றது. ஏன் என்றால் எல்லோருக்கும் பேராளராக வருவதற்கு அழைப்பிதழ் இல்லையா என்ற நிலை வந்து விடக் கூடாது.
எனவே இவற்றையெல்லாம் மாற்றி அமைக்கின்ற ஒரு புதிய யுகத்துக்கு நாங்கள் இந்த கட்சியை நடத்திச் செல்ல வேண்டும். கடந்த பேராளர் மாநாட்டின் போதும் நான் இதையே சொல்லியிருக்கின்றேன்.
சகோதரர் ஹிஸ்புல்லாஹ் கூறியது போது, இங்கு குறிப்பிடப்படும் பிரகடனங்கள், இங்கு பேசப்படுகின்ற விடயங்கள் வெறும் உதட்டளவில் மாத்திரம் இருந்து விட்டு போகின்ற விடயமாக இல்லாமல் உள்ளத்தில் ஆழப் பதிந்த விடயமாக அதற்கு உயிரோட்டம் கொடுக்கின்ற இந்த கட்சியின் உன்னதமான வேலைத் திட்டமாக அவை வடிவமைக்கப்பட வேண்டும் என்றார்.அதற்காக பதவி பொறுப்பை எடுத்தவர்கள் பற்றி நேற்று கட்டாய உச்ச பீடத்திலும் நான் இதை வலியுறுத்தி பேசினேன்.
இந்த விவகாரங்களுக்காக எங்கள் பிரதித் தலைவர்கள் தொகையை இன்று நாங்கள் ஏழாக கூட்டி யிருக்கின்றோம். எல்லா அரசியல் அந்தஸ்தில் இருக்கின்ற முக்கிய பிரதிநிதிகளை உள்வாங்கி இந்த கட்சியை -இதற்கு எதிராக இருக்கின்ற களங்கங்களையும், விமர்சனங்களையும் புறந்தள்ளி முன்கொண்டு செல்வதற்காக எல்லோரும் தலைவர் உட்பட உறுதி பூணுகின்ற ஒரு பேராளர் மாநாடாக இந்த மாநாடு மாறுகின்றது செய்தியை மக்களுக்கு நாங்கள் சொல்லுகின்றோம்.
எனவேதான் இன்று அகில உலகெங்கிலும் முஸ்லிம்களுடைய மிகபெரிய அவலமாக மாறி இருக்கின்ற பலஸ்தீன பிரச்சினை, அந்த ப்பிரச்சினைக்கான தீர்வு அதை இழுத்தடிக்கின்ற வல்லரசுகள் அந்த வல்லரசுகளுக்கு எதிரான போராட்டம் இதை நாம் எந்த அளவுக்கு செய்தோம் என்பதை எங்களை நாங்களே கேள்வி கேட்கக் கடமை பட்டுள்ளோம்.
இப்போது அமெரிக்காவில் எல்லா பல்கலைகழகங்களிலும் போராட்டம். அமெரிக்க பல்கலைகழகங்களில் உள்ள யூத மாணவர்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசுகின்றார்கள். நடக்கின்ற அநியாயத்துக்கு எதிராகப் பேசுகின்றார்கள். அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அரசியல் சக்திகள் பொலிசாரை அனுப்பினாலும் ,நெஞ்சை நிமிர்த்தி அவர்களோடு வாதிடுகிறார்கள். பல்கலைகழக பேராசிரியர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் பச்சோந்தித் தனமாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பை பேசிவிட்டோம், காட்டமாகச்சொல்லி விட்டோம் என்பதோடு நின்று விடுவதா? ஏன் ஆட்சியாளர்களை கேள்விக்குட் படுத்துவதில்லையா?
ஆட்சியாளர்கள் இரண்டு தேசங்கள் அமைய வேண்டும். பலஸ்தீனம், இஸ்ரேலும் இரண்டு தேசங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது எமது வெளிநாட்டுக் கொள்கை என்று சொல்லிக் கொள்கின்றார்கள் அது இன்னும் நான்கு வருட காலத்தில் மலரும் என்றும் அரசாங்க தலைவர்கள் அறிக்கை யிடுகின்றார்கள். ஆனால், இஸ்ரேலோடு கள்ள உறவு கொண்டாடுகின்றார்கள். அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் அடி பணிந்து செய்கின்றார்கள்.
செங்கடலுக்கு கப்பல் அனுப்புங்கள் என்றால், இங்கு இருக்கும் மீன்பிடிப் படகுகள் போன்ற கடற்படை படகுகளை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்குமாக அனுப்புகின்றார்கள். என்ன கேவலமான வேலைகளை எங்களின் அரசாங்கம் செய்கின்றது?
தென்னாபிரிக்கா அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் இஸ்ரேலுக்கு எதிராக, அவர்கள் செய்யும் போர் குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கின்றார்கள். நாங்களும் காலநிலை மாநாடு என்று போய் சர்வதேச நாடுகளுக்கு சவால் விடுகின்றோம். ஆனால் இந்த இஸ்ரேலுக்கு எதிராக ஒரு சவாலும் கிடையாது. இஸ்ரேல் அபகரித்த பலஸ்தீன மண்ணில் குடியேற்றங்களை செய்து கொண்டு போகின்றது. இன்னும் 4, 5 வருடங்கள் போனால் பலஸ்தீனர்கள் குடியிருக்க ஓர்
அங்குல நிலமும் மிஞ்சி இருக்காது. அமெரிக்க அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் குண்டு மழை பொழிகின்றார்ள். அபகரித்த பூமியில் மாடிவீடுகளைக் கட்டுகின்றார்கள். குடியேற்றங்களை செய்கின்றார்கள்.
ஏன் இவற்றுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் பேச முடியாது. அதை பற்றி ஒரு வார்த்தை கிடையாது. காத்திரமாக சொல்லுங்கள், குடியேற்றங்களை நிறுத்துங்கள். இந்த யுத்தத்தை நிறுத்துங்கள், உடனடியாக போர் நிறுத்தங்கள் செய்யுங்கள். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த கூட்டத்தில் நாம் இருக்கின்றோம். அமெரிக்காவுடைய “வீட்டோ” ஐக்கிய நாட்டின் பொதுச்சபையின் தீர்மானத்தையும் ரத்து செய்கின்ற அதிகாரம் நிரந்தர பாதுகாப்பு சபையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் அமெரிக்காவின் கைகளில் இருக்கும் வரை இஸ்ரேலை ஒன்றும் செய்து விட முடியாது.
நாங்கள் அமெரிக்கா கூறியதும் செங்கடலுக்கு படகுகளை அனுப்புகின்றோம். இந்த இரட்டை வேடம் களையப்பட வேண்டும். இதை களைந்து நேரடியாக அப்பாவி பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக எங்கள் நாட்டின் அரசும் தலைமைகளும் பேச வேண்டும். இதுதான் காலத்தின் தேவை.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்ததும் ஜே.ஆர். ஜெயவர்தன சென்பிரான்சிஸ்கோ மாநாட்டில் போய் ஜப்பானுக்கு சார்பாகப் பேசினார். அனைவரும் ஹிட்லரோடு சேர்ந்து ஜப்பான் இரண்டாம் மகா யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போது ஹிரோஷீமா, நாகசாகியில் அணுகுண்டுகள் பொழியப்பட்டு அழிக்கப்பட்ட போது, ஜப்பானை துண்டு போடுவதற்கு, ஜப்பானை பங்கிட்டு கொள்வதற்கு மேற்கத்தைய வல்லரசுகள் முனைப்புக் காட்டிய போது, ஜப்பானுக்காக பேசினார் என்பதுதான் ஜே. ஆர். ஜெயவர்தனவுக்குரிய அந்தஸ்த்து. ஜே. ஆர். ஜெயவர்தன ஜப்பானுக்கு எப்போது போனாலும் அவருக்கு அங்கு தனியான மரியாதை. ஏன் என்றால் எல்லா வல்லரசு நாடுகளும் தங்களது நாட்டை கூறு போடுவதற்கு, பங்கிட்டு கொள்வதற்கு எத்தனித்தபோது, பௌத்த தர்மத்தின் அடிப்படையில் ஜப்பானுக்கு மன்னிப்பு வழங்குங்கள், ஜப்பானை மீள கட்டியெழுப்புவதற்கு உதவுங்கள். என்று அவர் துணிகரமாகச் சொன்னார் என்பதற்காக அவருக்கு அந்த மரியாதை.
இந்த அளவு அநியாயம் நடக்கின்ற போது இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய தலைவர்கள் எமது நாட்டில் இல்லை.
இந்த பம்மாத்து வேலைகளை விட்டு விட்டு பலஸ்தீனர்களுடைய அவலங்கள் முழுமையாக தீர்வதற்கு அவர்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு மிகப் பெரிய போராட்டங்களை செய்வதற்கு இந்த நாட்டில் இருக்கின்ற சகல இன மக்களையும ஒன்று திரட்டுகின்ற பணியில் நாம் இறங்க வேண்டும். இது முடிவுராத போராட்டமாக இருந்தாலும் நியாயமான, நேர்மையான போராட்டம். உலகெங்கிலும் கிளர்ச்சி வெடிக்கின்றது. எமது பிரகடனங்களிலும் இது விடயமாக பேசப்பட்டது.
தொடர்தேர்ச்சியாக பல விடயங்களை நாம் பேசியிருக்கின்றோம். எமது பிரகடனங்களில் சொன்ன விடயங்கள் கிடப்பிலே இருக்கின்ற விடயங்கள் தொடர்ந்தும் கிடப்பிலே போடப்படாமல் எம்மவர்களின் அவலங்கள் தீரும் வகையில் அதற்கான தீர்வுகளை கண்டறிய பட வேண்டும். அந்த தீர்வுகளை அடைவதற்கான முழு முயற்சியிலும் நாங்கள் ஒரு சேர ஈடுபட வேண்டும்.
குறிப்பாக இந்த காத்தான்குடி மண் நிறைய அவலங்களை சந்தித்த மண். இந்த இயக்கம் வேர் விட்ட மண். 1980ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியை இங்கேதான் எங்களின் முன்னாள் தலைவர், கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மர்ஹூம் அகமது லெப்பையோடு இந்த மண்ணில்தான் வேர் கொள்ள செய்தார்.இதே மண்ணில் இந்த இயக்கம் பல வெற்றிகளைக் கண்டிருக்கின்றது.
எங்களது கட்சி,தற்பொழுது சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் மீள் இணைவோடு இன்னும் வீரியத்தோடு, இந்த முழு மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீறு கொண்டெழுந்திருக்கின்றது. சகோதரர் அலிஸாஹிர் மௌலானாவும் மக்கள் அவலங்களை சந்தித்த போது உடன் வந்து வெறும் வர்த்தகராக கொழும்பில் இருந்தவர் ஏறாவூரில் என்னதெல்லாம் செய்தார். எப்படியெல்லாம் உடமைகளையும் உயிர்களையும இழந்தவர்களை கவனிப்பதற்கு ஓடோடி வந்து எவற்றையெல்லாம் செய்தார் என்பதை மக்கள் மறக்க வில்லை.
அந்த கட்டங்களில் இந்த மண் பட்ட அவஸ்த்தை விடவும் பாரிய அவஸ்தையை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி காத்தான்குடி அனுபவித்தது. யாரும் எதிர்பார்திராத ஒரு பழிச் சுமையை இந்த மண் மீது சுமத்தினார்கள். அந்த பழியின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருந்தது என்ற விடயம் இப்போது படிப்படியாக அம்பலத்துக்கு வந்தி ருக்கின்றது. ஒரு கூலிப்படையை வைத்து இந்த புண்ணிய பூமிக்கு களங்கம் விழைவிக்கின்ற அந்த மாபாதகய் செயலுக்கு யார் பின்னணியில் இருந்தார்கள் என்ற விபரம் பொதுவெளியில் கதைக்கப்படுகின்றது. முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கும் புலனாய்வு அதிகாரிகளுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் விரல் நீட்டுகின்றார்கள். இன்னும் பல இடங்களுக்கு விரல் நீட்டப்படுகின்றது. உண்மை கண்டறியப்பட வேண்டும். இந்த படுபாதகச் செயலை செய்து தொடர்ந்தேர்ச்சியாக பாதிக்கப்பட்ட இந்த மண்ணுக்கு மேலும் அழியாத ஒரு களங்கத்தை ஏற்படுத்துகின்ற அந்த விவகாரத்துக்கு பின்னால் இருந்து செய்த சதி என்ன என்பது அம்பலப்படுத்தப் பட வேண்டும். இது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது இன்று பூதாகரமாக எழுந்து நிற்கின்றது. இதற்குத் தீர்வு வேண்டும்.
தீராமல் இருக்கின்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு -எங்களது நிலப்பிரச்சினை, காணிப்பிரச்சினை, நிர்வாக பிரச்சினை இப்படி அடுக்கடுக்காக பிரச்சினைகளை வைத்து கொண்டு இருக்கின்ற ஒரு சமூகத்தின் விடிவுக்காகப் போராடுகின்ற இயக்கம் வெறும் அற்ப சொற்பங்களுக்காக எங்களுடைய அடிப்படைகளை மறந்து விட முடியாது.
எனவேதான் அந்த அடிப்படைகளுக்கு திரும்புகின்ற மறைந்த தலைவரின் காலத்தில் இந்த இயக்கத்தின் மீது மக்கள் காட்டிய அந்த அமோக ஆதரவை முழமையாக மீட்டுக் கொள்கின்ற யுகத்துக்கு மீண்டு போகின்ற ஒரு யுகமாக அடுத்த யுகம் அமையட்டும். .
தலைவர்கள் சோரம் போனால் கட்சிகள் அழிந்து போகும் அற்ப சொற்பங்களுக்காக அடிப்படைகளை மறக்க முடியாது - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 29, 2024
Rating:

கருத்துகள் இல்லை: