ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலான சர்ச்சை
ஜனாதிபதியின் பதவிக்காலமானது ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களாக எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினைத் தொடர்ந்து இது இன்றைய நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
ஜனாதிபதியின் பதவிக்காலமானது நிறைவடையும் திகதி தொடர்பில் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளிக்கின்ற வரையிலும் ஜனாதிபதித்தேர்தலுக்கான தடையுத்தரவை வழங்கக்கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அந்த மனுவுக்கெதிராக நான்கு இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்படுள்ளன.
குறிப்பாக ஏற்கனவே அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் பதவிக்காலமானது ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசியலைமப்பின் அத்தியாயம் 7 இன் கீழான உறுப்புரை 30 இன் உப உறுப்புரை 2 ஆனது பின்வருமாறு காணப்படுகிறது.
"குடியரசின் சனாதிபதி மக்களினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டுமென் பதுடன், அவர் ஐந்தாண்டுகள் கொண்டவொரு தவணைக்குப்பதவி வகித்தலும் வேண்டும்"
எனினும் இது இவ்வாறிருக்க ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்தல் தொடர்பிலான ஏற்பாடான அத்தியாயம் 12 இன் உறுப்புரை 83 இன் உப உறுப்புரை ஆ வானது ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களின் பின்னராகவே பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்குரிமை ஆகியவற்றினூடாக நீடிக்கப்படலாம் எனக்காணப்படுகின்றது. அவ் உறுப்புரையானது பின்வருமாறு காணப்படுகின்றது.
"விடயத்துக்கேற்ப, சனாதிபதியின் பதவிக்காலத்தை அல்லது பாராளுமன்றத்தின் வாழ்காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு காலத்துக்கு நீடிக்கின்ற 30 ஆம் உறுப்புரையின் (2) ஆம்பந்தியின் ஏற்பாடுகளை, அல்லது 62 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் ஏற்பாடுகளைத் திருத்துவதற்கான அல்லது நீக்குவதற்கும் மாற்றீடு செய்வதற்குமான அல்லது மேற்கூறிய 30 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் அல்லது 62 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாததாக இருக்கும் ஒரு சட்டமூலமும்,
அவற்றுக்குச் சாதகமாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் (சமுக மளிக்காதோர் உட்பட) மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாததாக இருப்ப தோடு மக்கள் தீர்ப்பொன்றில் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு. 80 ஆம் உறுப்புரைக்கிணங்க சனாதிபதியினால் சான்றுரை ஒன்று அதன்கண் எழுதப்பட்டால் சட்டமாக வருதல் வேண்டும்."
இங்கே இந்த இரண்டு உறுப்புரைகளிடையேயான வித்தியாசத்தினை மையமாகக்கொண்டே இந்த விடயமானது பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
இம்மனு தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேலும் 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்கள் தன்னுடைய ஆட்சி நிறைவுறும் தருணத்தில் தான் தேர்தலில் போட்டியிடும் போது பதவிக்காலம் ஆறு வருடங்களாகவே கணாப்பட்டதாகவும் அதன் பின்னரே ஐந்து வருடங்களாகக்குறைக்கப்பட்டதாகவும் எனவே தனது பதவிக்காலம் தொடர்பில் அபிப்பிராயத்தை வழங்குமாறு அப்போது உயர் நீதிமன்றத்தை கோரியிருந்தார். அப்போது அவரின் பதவிக்கிலமானது ஐந்து வருடங்கள் மாத்திரமே என அப்போது உயர்நீதிமன்றமானது வியாக்கியானம் வழங்கியிருந்தமையும் இங்கு ஞாபமூட்டத்தக்கது.
-ஆதம்லெப்பை ஆதிப் அஹமட்-
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலான சர்ச்சை
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2024
Rating:

கருத்துகள் இல்லை: