’பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்’ கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர்.
வரலாற்றாசிரியர் கலாநிதி அர்ஷியா லோகந்த்வாலா (Dr. Arshiya Lokhandwala) அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட, "பெண்ணியத்தின் எதிர்காலம்: கலை, செயல்பாடு மற்றும் தெற்காசியப் பெண்" எனும் தலைப்பிலான தெற்காசியப் பெண்ணிய கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய கலைக் கண்காட்சியைப் பார்வையிட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் செப்டம்பர் 26 ஆம் திகதி இணைந்து கொண்டார். இந்தக் கண்காட்சி கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்திருக்கும் லோட்டஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலைக் கண்காட்சி பெண்ணியத்தின் எதிர்காலம், பாலின சமத்துவமின்மை, பாலினம் அடிப்படையிலான அமைப்பு ரீதியான வன்முறை போன்ற விடயங்களைக் கேள்விக்குள்ளாக்குவதுடன், பெண்களின் ஆற்றல், சுதந்திரம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மேடை அமைக்கின்றது.
இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதினொரு பெண்ணிய கலைஞர்களின் படைப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. இவர்கள் தத்தமது நாடுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தமது கலைப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அத்தோடு இந்தக் கண்காட்சி உலகின் பல நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக நேபாளத்தின் காத்மாண்டு நகரில் இக்கண்காட்சி நடத்தப்பட்டிருந்தது. இலங்கையில் இக்கண்காட்சி செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் அக்டோபர் 08 ஆம் திகதி வரை கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்திருக்கும் லோட்டஸ் கலைக்கூடத்தில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, இலங்கை கலை மன்றத்தின் தலைவர் கீர்த்தி வெலிசரகே, தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சனோஜா கஸ்தூரிஆரச்சி ஆகியோர் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு
.jpeg)
கருத்துகள் இல்லை: