திடமான ஆளுமை மர்ஹூம் சின்னலெப்பை (BA) சேர்!!
-எம்.எஸ்.எம்.ஜஃபர்-
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் உச்சக்கட்டம் அடைந்திருந்த 1983-1984ஆம் ஆண்டுகாலப் பகுதி...
கன்னி,வெடித்தாக்குதல்கள்,
கிளைமோர் தாக்குதல்களுக்கு மத்தியில், "பிஸ்டல் குரூப்"பினர்களது இரானுதத்திற்கு எதிரான,
எதிர்பாராத கெரில்லாத் தாக்குதல்கள் என போராட்டக் குழுக்களின் இலங்கை இராணுவத்திற்கு எதிரான அட்டகாசம் ஒருபக்கம்,
ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கி நாட்டில் சமாதானத்தை கொண்டு வர சுற்றிவளைப்புக்கள்,சோசனைச் சாவடிகள்,என்று ஆயுதக் குழுக்களை எதிர்த்து நின்ற இலங்கை இராணுவத்தின் கெடுபிடிகள் மறுபுறம்.....
சில காலம் "இந்திய அமைதிப்படை என்று இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்த "இந்திய இராணுவத்தின்" அட்டகாசத்தில் "இருதலைக் கொள்ளி எறும்பாய்" முஸ்லிம் சமூகம் பட்ட அவஸ்தைகள், புறம்பாய் எழுதவேண்டியதொரு சோக வரலாறு.....
ஒவ்வொரு காலையிலும், பாடசாலைக்குப் போகும் வழியில், துரோகிகள் என்ற குற்றச்சாட்டில் ஏட்டிக்குப் போட்டியாக ஆயுதக்குழுக்களால் மின்கம்பங்களில் கட்டிவைக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பட்ட வீதிகளில் மனித அவலங்கள் மற்றொரு புறம்,
முகம் மறைத்த மனித பொம்மைகளைக் கொண்டு,
காட்டிக்கொடுத்தல், சுற்றி வளைப்பு என,
ஆயுதக்கலாச்சாரத்தால், அல்லோல,கல்லோலப்பட்டு மனித அவலமும்,மனிதஉரிமை மீறலுமாக பயங்கரம் நிறைந்த காலப்பகுதி......
இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்ற பத்திற்கும் மேற்பட்ட நானும் எனது நன்பர்களும்,
ஏனைய பாடசாலைகளில் கற்று 1983ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சை எழுதுவதில் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருந்ததால், பாடங்களில் சரியாக கவனமெடுக்க முடியாமல் போனதால் க.பொ.த உயர்தரம் கற்பதில் பல சவால்களை எதிர்கொண்டு,
அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தடுமாற்றத்தில் திளைத்திருந்த எங்களைப்போன்ற மாணவர்களை,
பாடசாலையினுள்ளேயே ஏற்பட்ட சில எதிர்ப்புகளுக்கு மத்தியில், தனது தற்துணிவில்,
காத்தான்குடி, மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராக பொறுப்பேற்றிருந்த ஆளுமை நிறைந்த அதிபர் சின்னலெப்பை( BA) சேர் அவர்கள்,
எங்களுக்காக பிறம்பான வகுப்பினை ஏற்படுத்தி கற்றல் வசதிகளை ஏற்படுத்தித் தந்ததன் மூலம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டலையும் நல்ல சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி
1984ஆம் ஆண்டு க.பொ.த(சா/த)பரீட்சையில் எங்களை தோற்றுவதற்கு ஏற்பாடு செய்து தந்து நாங்கள் சிறந்த பெறுபேற்றினை பெறக்கூடியதாக இருந்ததுடன்,
1984ஆம் ஆண்டு "காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயம்" க.பொத(சா/த) பரீட்சையிலே சிறந்த அடைவினை ஈட்டிக் கொண்டதுடன்,
நாங்கள் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வியைத் தொடர்ந்து எங்களது வாழ்க்கையில் கல்வியின் மூலம் முன்னேற்றமடைய சின்னலெப்பை சேர் அவர்களது தற்துணிவான ஆளுமை எங்களுக்கு முழுமையாக வழிகாட்டியாக இருந்தது என்றால் மிகையாகாது........
சிறந்த குடும்பப்பின்னணியைக் கொண்ட சின்னலெப்பை சேர் அவர்கள்,
காத்தான்குடியில் இருந்து 1960ஆம் ஆண்டு சென்று, இந்தியாவின் பூனே பல்கலைக்கழகத்தில் தனது உயர்கற்கையினை 1964 ஆம் ஆண்டு முடித்து காத்தான்குடியின் இரண்டாவது கலைப்பட்டதாரியாக இலங்கை வந்தடைந்த சின்னலெப்பை( BA) சேர் நாட்டின் பல பாகத்திலும் தனது கல்விப்பணியினை ஆற்றியுள்ளதுடன்,
கல்வித்துறையில் பின் தங்கியிருந்த எமது முஸ்லிம் சமூகம், கல்வித்துறையில் பல சாதனைகளையும், மெச்சத்தக்க அடைவுகளையும் இன்று அறுவடை செய்வதற்கு அன்றைய சமூக சிந்தனையுள்ள கல்விமான்களுடனும்,சமூக செயற்பாட்டாளர்களுடனும் இணைந்து சின்னலெப்பை சேர் ஆற்றிய பணிகள் அளப்பரியதும், சமூகம் நன்றிகூறக் கடமைப்பட்டதுமாகும்.
சமூக நலனுக்காகவும்,கல்வி முன்னேற்றத்திற்காகவும் அன்றைய அரசியல் பெருந்தலைவர்களான "டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத்,ACS.ஹமீத்,MH.முஹம்மது,பாக்கீர் மாக்கார்,அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை, ஜவாத் சேர் போன்றோர்களோடு இணைந்துசெயற்பட்டவர்கள்,
சில சந்தர்ப்பங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்கும் உள்ளாக்கப்பட்டு தனிப்பட்ட வாழ்விலும் பல சங்டங்களையும் சமூகத்திற்காக தனது தலையில் சுமந்துள்ளார்.
ஊரின் பல பொது நிறுவனங்களின் உருவாக்கத்திலும்,வளர்ச்சியிலும் தனது அறிவாற்றலையும்,அனுபவத்திறனையும் கால,நேரம் கடந்து சமூக சேவைக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஒரு சிறந்த சமூகசேவையாளனும் கூட,
"திடமான ஆளுமைமிக்க சின்னலெப்பை சேர்" அவர்கள் எமதூருக்கும் ,சமூகத்திற்கும், ஏன் இந்த நாட்டிற்கும் கிடைத்த ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர்.
அன்னார் சமூகத்திற்காக ஆற்றிய நற்பணிகளை ஏற்று "ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அள்ளாஹ்வின் அருட்கொடையான சிறப்பான சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்!
திடமான ஆளுமை மர்ஹூம் சின்னலெப்பை (BA) சேர்!!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 26, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 26, 2025
Rating:




கருத்துகள் இல்லை: