Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சாக்கடை அரசியலும் குற்றச் சொத்துக்களும்

“அரசியல் ஒரு சாக்கடை, அதில் இளைஞர்கள் கால்வைக்கக் கூடாது” என்ற அர்த்தமற்ற தத்துவம் நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. சாக்கடை நம்மீது பட்டாலோ அல்லது சாக்கடையில் நாம் இறங்கினாலோ நாறப்போவது நாம்தான் என்பதும் இந்த அர்த்தமற்ற தத்துவத்தின் தொடர்ச்சியே ஆகும். இதன்மூலமாக, சாக்கடை அரசியல் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த சாக்கடை அரசியலின் தலைமைகளின் வாரிசுகளுக்கு இத்தத்துவம் விதிவிலக்கானது. 

அதாவது, பிரபுத்துவ அரசியல் பரம்பரைக்கே இது விதிவிலக்கானது. இது எப்படி சாத்தியமாகலாம் மற்றும் நியாயமாகலாம்? எனவே, இவ்வாறான அர்த்தமற்ற தத்துவங்கள் பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தை பாதுகாப்பதற்காக வற்புறுத்தி திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன.

ஏனென்றால், இவர்கள் கூறும் அரசியலின் உள்ளர்த்தம் வெறும் சாக்கடையை மாத்திரம் மையப்படுத்தியிருந்தால், சாக்கடை அள்ளும் உழைப்பாளரோ அல்லது அவர் வாரிசோ அரசியல் எனும் சாக்கடையில் கால்வைக்க இயலும்தானே? அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றனவே. இவற்றை அளசிப் பார்க்கும்போது, அர்த்தமற்ற தத்துவமும் ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, இங்கு சாக்கடை என்பதன் பொருள் “பெரும் குற்றங்களில் விளைந்த சொத்துக்கள்” என்பதாகும்.

இப்போது, அந்த தத்துவத்தின் மெய்பொருளை நோக்கின், “பெரும் குற்றங்களில் விளைந்த சொத்துக்களை பாதுகாக்கும் பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ அரசியல் அதிகாரத்தில், உழைக்கின்ற சாதாரண வர்க்கத்தின் வாரிசுகளே கால்வைக்க வேண்டாம்.” எனும் எச்சரிக்கையை வெளிப்படுத்துகிறது.

ஆனால், இந்த அரசியல்தான் சட்டங்களை இயற்றுகிறது; அரச கட்டமைப்பை கையாள்கிறது; அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பரத்தையும் வாக்காளர் பெரும் மக்களுக்கு வரிச்சுமையையும் வறுமையையும் பரிசளிக்கிறது; மக்கள் மத்தியில் பொருளாதார மற்றும் கலாசார ஏற்றத்தாழ்வுகளை விசாலப்படுத்தி, புனிதம் மற்றும் தீட்டு எனும் சித்தாந்தத்தை பாதுகாக்கிறது; வர்க்க முரண்பாட்டை பேணுகிறது.

இந்த அரசியலில் உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள் கால் வைக்காத போதும், எல்லா அழுத்தங்களையும் அழிவுகளையும் இவர்களே அனுபவிக்கிறார்கள். இதைவிடவும் கொடியதா சாக்கடை அரசியலில் களமிறங்கி அவற்றை சுத்தம் செய்ய முனைவது? எனவே, இவ்வாறான சிந்தனையை மழுங்கடிக்கச் செய்ய சாக்கடை அரசியல்வாதிகள் எத்தனையோ பிரயத்தனங்களை வரலாற்றில் மேற்கொண்டிருக்கிறார்கள்.

காற்றில் பறக்கும் வாக்குறுதிகளை வழங்குதல், இலவசங்களுக்கு பழக்கப்படுத்தல், முழந்தாளிட்டு தம்மை வணங்கச் செய்தல், மூடநம்பிக்கையில் மூழ்கடித்தல், பிரிவினைவாதத்தை விதைத்தல், அரச இயந்திரங்களை ஏவிவிட்டு அடக்குமுறை செய்தல் மற்றும் படுகொலை செய்தல் போன்ற பல தந்திரோபாயங்களை கையாண்டனர். இலங்கையின் கடந்த கால அரசியலும் இவ்வாறானதே.

ஆனால், இவற்றையெல்லாம் மீறியெழுந்த இளைஞர்களின் எழுச்சியால் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுச்சியில் பிறந்த மக்கள் ஆட்சியால் சாக்கடை அரசியல் சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுத்திகரிப்புத் தொழிலாளர்களாக களமிறங்கியிருப்பவர்கள் எவரெனில், இதுநாள்வரை திட்டமிட்டு அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாவர். 

ஆகவே, சாதாரண மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமையை இறக்கும், இறுக்கப்பட்டிருக்கும் கயிற்றையும் அவிழ்க்கும் நடவடிக்கையில் நிகழ்கால அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. இதில் மிகமுக்கியமான விடமாகவிருப்பது, இளந்தலைமுறையை மீட்டெடுக்கும் பணியாகும்.

ஏனென்றால், உலகத்தில் நிகழ்ந்த எல்லா எழுச்சிகளிலும் புரட்சிகளிலும் இளைஞர்களின் வகிபாகமென்பது மிகப்பெரியது. ஆகவே, அவற்றை முறியடிக்க அதிகார வர்க்கம் இளைஞர்களை ஓய்வில்லாமலும் கனவுலகத்திலும் மயக்கத்திலும் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. 

இவ்வாறான நிலையிலேயே போதைப்பொருளும் கூட தங்குத்தடையின்றி இளைஞர்களை வந்து சேர்ந்துவிடுகிறது. அதாவது, இளம் தலைமுறையை நடைபிணமாக மாற்றும் நடவடிக்கையாகும் அல்லது சிந்தனை நரம்புகளை சிதைக்கும் நடவடிக்கையாகும்.

கல்வித் தகைமையில் உயரிடத்தில் இருந்த வடமாகாணம் யுத்த நிறைவுக்குப் பின்னர் வீழ்ச்சி கண்டதற்கும், போதைப்பொருள் கலாச்சாரத்திற்கும் இடையில் சம்மந்தமில்லை என்று எவரும் கூறுவார்களா? ஆகவே, சிந்திக்கும் திறனை சிதைத்து அல்லது சுருக்கி அடிமைப்படுத்தும் யுக்தியாகவும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு பின்னர் கூட கூடுதலான போதைப்பொருட்கள் இளைஞர்களை இலக்குவைத்து இலங்கைக்கு கொண்டுவந்திருக்கவும்கூடும். இந்தப் போதைப்பொருள் கலாச்சாரம் குற்றக் கும்பல்களின், அவற்றை பாதுகாக்கும் அரசியலின் சட்டவிரோத சொத்துக்களை பெருகச் செய்வதோடு, பாதுகாக்கவும் செய்கிறது. 

ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது. மீளவும் எனவே, குற்றச் சொத்துக்களின் பின்னணி பற்றிய முழுவிபரத்தையும் கண்டறிய குற்றச்செயல்களின் வரும்படிகள் விசாரணைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக விடயமாகும்.

வெறும் கால்களில் சுற்றித் திரிந்தவர்கள் திடுமென பெரும் தொழிலதிபர்களாக மாறிவிடுவதும், டுபாய், கட்டார், ஆபிரிக்கா மற்றும் ஹோங்கொங் என்று சென்று வருவதும் ஆச்சரியமான விடயமாக இருக்கிறது. தொழிலதிபர்கள் காசை வாறியிரைப்பதும் காலால் மிதிப்பதும் என்ன டிசைன்?

ரணில் – மைத்திரி ஆட்சியின்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில்தான் அதிகமான போதைப்பொருள் இலங்கைக்குள் வந்தது என்று குற்றம்சாட்டியிருந்தார். அப்போது, மர்வின் சில்வா அதனை மறுத்தார். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் இலங்கையில் பரவியதற்கு அவர் எப்படி பொறுப்பாவார் என்று கேட்டிருந்தார். 

அதற்கு ரஞ்சன் ராமநாயக்க, “ஒருவர் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்புகிறார், இலங்கையில் ஒருவர் அதை பெற்றுக்கொள்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதைக் கண்டும் காணாமல் வேறுபக்கம் திரும்பிக் கொள்கிறார். இப்போது கூறுங்கள், ஜனாதிபதிக்கும் போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா?” என்றார்.

கூடுதலான போதைப்பொருட்கள் ராஜபக்ஸர்களின் மெதமுலன வளவை சுற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளும் தென்மாகாணத்தில் மாட்டுப்பட்டிருக்கின்றனர். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் துறைமுகங்கள், களஞ்சியசாலைகள் போன்றனவும் தென்மாகாணத்தில் பிடிபட்டுள்ளன. 

போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட மனம்பேரி, பாதாள உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட மத்துகம ஷான், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத் போன்றவர்கள் நேரடியாகவே மொட்டுக் கட்சி அல்லது அதற்கு முன்பிருந்தே ராஜபக்ஸவின் அரசியலில் ஈடுபட்டவர்களாவர். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது, நாமல் ராஜபக்ஸ ஹம்பாந்தோட்டையில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் ராமநாயக்க மற்றொரு இடத்தில், “இயக்கத்தில் இருந்த கே.பி. என்பவர் பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்” என்கிறார். அது ஒருபக்கம் இருக்க, கே.ஜே.பாய் மற்றும் தக்சி போன்றவர்கள் யாழ் மாவட்டத்தில் இருந்துகொண்டு பெரும் குற்றசம் செய்தவர்கள். கடந்த காலங்களில் மாத்திரம் செவ்வந்தியை போன்று நூறு பேருக்கும் அதிகமான குற்றவாளிகளை கே.ஜே.பாய் வெளிநாடுகளுக்கு தப்பிக்க வைத்திருக்கிறார். 

செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த அரச உத்தியோகத்தர் ஒருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே, யாழ்ப்பாணமும் ஹம்பாந்தோட்டையும் பெரும் குற்றங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே, இவற்றை ஒடுக்க பொதுச் சட்டங்களை பயன்படுத்த வேண்டும். இவை போதாவிட்டால் புதுச் சட்டங்களை இயற்ற வேண்டும். ஏனென்றால், இலங்கைக்குள் தான் இப்பகுதிகளும் இருக்கின்றன.

ஆளும் கட்சி மொட்டுக் கட்சி மீது போதைப்பொருள் கள்ளவியாபார குற்றச்சாட்டை முன்வைத்துள்ள போதிலும், அக்கட்சியினர் அதை மறுத்து வருகின்றனர். “போதைப்பொருள் குற்றங்களுடன் அரசியல் தொடர்பு இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்” என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்களை விரைவில் பகிரங்கப்படுத்துவதாக அமைச்சர் லால் காந்தவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாமல் ராஜபக்ஸ, “எதிர்வரும் தேர்தல்களில் மொட்டுக் கட்சியில் போட்டியிடுவதென்றால், தாங்கள் குற்றமற்றவர்கள் என்ற பொலிஸ் சான்றுதழுடன் வரவேண்டும்.” என்று தமது மொட்டுக் கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதனால் வெளிப்படுவது என்ன? இதுவரையில் மொட்டுக் கட்சியில் இருந்தவர்கள் யார்? அக்கட்சியை பிரதிநிதித்தப்படுத்தி வாக்கு கேட்டவர்கள் யார்? பதவிகளில் இருந்தவர்கள் யார்? ஆகவே, பதில் விரைவில் கிடைக்கலாம் என நம்புவோமாக.


குற்றச்செயல்களின் வரும்படிகள் விசாரணைப் பிரிவு பழைய பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் (20) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலைமையில் (20) திறந்து வைக்கப்பட்டது. “தமது அதிகாரத்தை பொலிஸ் அதிகாரிகள் துஸ்பிரயோகம் செய்யக்கூடாது” என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் எழுந்த கோசத்தில் ஒன்று மக்களிடம் பறிக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுவதாகும். இதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. “நாங்கள் எடுக்கும் முடிவுகளும், இயற்றப்படும் சட்டங்களும், அங்கீகரிக்கப்படும் திட்டங்களும் எங்கள் அமைச்சரவையின் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் செய்வதில்லை, ஒவ்வொரு வேலையும் மக்களின் தேவைகளுக்காகவே செய்யப்படுகிறது” என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்தில் உண்மை இருக்கிறது.

குற்றச் செயல்கள் மூலமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய 2025 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அதில் கையொப்பமிட்டதுடன், அது தொடர்பான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் சட்டம் தற்போது அமுலுக்கு வந்துள்ளது.

இச்சட்டம் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய சொத்துக்களை பறிமுதல் செய்வதிலுள்ள தடைகளை தளர்த்தியுள்ளதுடன், விசாரணை அதிகாரங்களையும் விரிவுபடுத்தியுள்ளது. குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை விசாரித்தல், தடை செய்தல், பறிமுதல் செய்தல் மற்றும் நீக்குவதற்கான முறையான செயன்முறையை இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகவே, இது நாட்டிற்கு அவசியமான ஒரு சட்டமாகும். இதன் மூலமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.

அதுமட்டுமன்றி, ஊழல் மோசடி போன்ற மிகக் கொடிய குற்றத்தின் மூலமாக ஈட்டப்பட்ட சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான விசாரணைகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையே புதிய விசாரணைப் பிரிவு திறப்பு ஆகும். 

கடந்த காலங்களில் 8 பில்லியன் டொலர் வெளிநாடுகளிடம் இருந்து கடன் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், 2 பில்லியன் டொலருக்கும் குறைவான சொத்து மதிப்பு மாத்திரமே எஞ்சியிருக்கிறது. மிகுதி பணத்திற்கு என்னவானதென்ற கேள்வியை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எழுப்பியிருக்கிறார். அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெப்பதாகவும் அவர் உறுதிவழங்கியிருந்தார்.


எவ்வாறாயினும், மக்களின் ஆதரவு இல்லாமல் தனித்து அரசாங்கத்தினால் மாத்திரம் இவற்றையெல்லாம் சாதித்துவிட இயலாது. ஆகவே, போதைப்பொருள் உள்ளிட்ட எல்லா குற்றச் செயல்களையும் தோற்கடிப்பதற்கு மக்கள் இயக்கம் முன்வர வேண்டும். 

இதில், வடக்கு – கிழக்கு – தெற்கு – மலையகம் என்ற பேதம் இருக்க முடியாது. எல்லா பகுதிகளிலும் குற்றச் செயல்கள் மலிந்துபோய்க் கிடக்கின்றன. அவற்றை பாதுகாக்கின்ற அரசியலும் முனங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, அவற்றை வேரறுப்பதற்கு மக்கள் அணித்திரண்டாக வேண்டும். குறிப்பாக, இளைஞர்களின் வகிபாகம் இன்றியமையாதது ஆகும்.


=சதீஸ் செல்வராஜ்=

சாக்கடை அரசியலும் குற்றச் சொத்துக்களும் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 26, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.