தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசு என்பதன் அடிப்படையில் தனக்கு வாக்களித்தவர்கள், தனக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோருக்குமாக தனது சேவையினை வழங்க முனைப்புடன் செயப்படுகின்றது..
நாட்டில் இன்று பல்வேறு மாற்றங்கள் சிறிது சிறிதாக நடந்து வருகின்றது. அதில் நம்பிக்கை தருகின்ற எத்தனையோ மாற்றங்களை இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு நடந்திருக்கின்றது.
கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் பெரும் பதட்டமடைத்துள்ளனர், இதுவரைக்கும் இந்த ஆட்சி வராமல் இருந்திருந்தால் நாம் நம்பி இருந்திருப்போம் விழிப்புணர்வு நிகழ்வுகளினால் போதைப் பொருளை ஒழித்திருக்க முடியும் என்று, கொலைகாரர்கள் ஒவ்வொரு தேசங்களுக்கும் சென்று கைது செய்யப்படுகின்றார்கள். படுகொலைகள் செய்துவிட்டு பாதாள குழுக்களை நடத்திவிட்டு பவ்யமாக வாழலாம் என்ற கனவுகள் இன்று வெரும் கனவுகளாக மட்டும் மாறுகின்றன.
இந்த போதைப் பொருளின் அச்சுக்களை, கொலைக் கும்பல்களின் இயந்திரங்களை இயக்கியவர்கள் நடுக்கமெடுத்து நசுக்கப்படுவதற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
அத்தோடு அரசு எந்த விளம்பரங்களும் இல்லாமல் மக்கள் நலத்திட்டங்களை மிக லாபகமாக எல்லா விதமான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக அதை செய்து கொண்டிருக்கின்றது.
அரசின் பிரதான கொள்கைகளின் விளைவாக இது நடக்கின்றது. மிக அதிகமான பகிரங்கப்படுத்தல்கள் விளம்பரங்கள் இல்லாமல் நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை நிலைமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து கொண்டிருக்கின்றது.
நேற்று நாம் இருந்த இன்னல்களை இன்று சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்திருக்கின்றோம். இப்போது எமக்கு பிரச்சனைகள் குறைவாக இருப்பதனால் பழைய பிரச்சனைகளை மறந்து புதிய பிரச்சனைகளை தேடி அவைகளை விமர்சித்து அல்லது பழைய பஞ்சாங்கங்களை தேடிப்பிடித்து பிரச்சனைகளை தேடி பயணிக்க தொடங்குகின்றோம். கொள்கை வாதங்கள் பேசுகின்றோம். தனி உரிமை தொடர்பில் கதைக்கின்றோம்.
அதன்படி தான் எமது காத்தான்குடி பிரதேசமும் அதன் அரசியலும் சற்று வேறு திசைகளை நோக்கி மெதுமெதுவாக நகர ஆரம்பிக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசு என்பதன் அடிப்படையில் தனக்கு வாக்களித்தவர்கள், தனக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோருக்குமாக தனது சேவையினை வழங்க முனைப்புடன் செயப்படுகின்றது.
அதற்கு அரசியல் பாகுபாடுகளை பயன்படுத்தி மக்கள் சேவையினை தடைப்படுத்துவதில் எள்ளளவு கூட எண்ணம் கிடையாது என்பதனை கடந்த கால விடயங்களில் இருந்து, அரசியல் செயற்பாடுகளில் இருந்து நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
அரசை அரசாங்கத்தை எதிர்த்த ஒருவர் மக்களை மையப்படுத்தி உருவாக்கிய ஒரு விடயம் ஒன்றினை உதாரணமாக அரச கட்டிடங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் வணக்கஸ்தலங்கள், சுற்றுலா இடங்களை நாம் ஒருபோதும் அவரது எதிர்ப்பை மையப்படுத்தி அரச சேவையினை செயல்படுத்த முடியாது. அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணானதும் கூட.
இந்தப் பின்புலத்தில் தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதிகளும், அபிவிருத்தி திட்டங்களும், மக்கள் விரும்புகின்ற சேவைகளும் இடம்பெறுகின்றன. அதன் வழியில் சிந்தனை செய்கின்றவர்கள் இந்த சிந்தனைக்கு புறம்பாக பொதுக் கொள்கையினை பராதீனப்படுத்தி தனிப்பட்ட குரோதங்களுக்காக தங்களது செயற்திட்டங்களை அமைத்துக் கொள்ள முடியாது.
அந்த வகையில் தான் அண்மையில் அல் அக்ஸா பள்ளிவாயலுக்கு சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் 9.95 மில்லியன் ரூபாய் செலவில் மலசல கூடங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதி காத்தான்குடி நகர சபைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அதனை பரிசீலனை செய்த குழு அந்த விடயத்தின் அவசியத்தினை மிக நியாயமாக உள்வாங்கிக் கொண்டது என்பதுதான் உண்மை.
அதில் சில விடயங்களை நான் இங்கு கூறியே ஆக வேண்டும்.
அந்தப் பள்ளிவாயல் யாருடைய பராமரிப்பில் யாரினால் உருவாக்கப்பட்டிருந்தாலும் , அந்த இடத்துக்கு மாதத்துக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்ப்பதற்காக வருகை தருகின்றார்கள், இந்த ஊரினை பார்ப்பதற்காக வருகின்ற அவர்களுக்கு இருக்கின்ற மலசலகூட தேவையினை பூர்த்தி செய்வது எமது கடமை அல்லவா?
சில சமயங்களில் பெண்களுக்கு ஏற்படுகின்ற சில உபாதைகளில் போதும் அயலவர்களின் வீடுகளை நாடுகின்ற நிலைமைகளும் ஏற்ப்படுவதாக அங்கு இருக்கின்ற முஅத்தினார் முறைப்பட்டதாகவும் அங்கு இருக்கின்ற அவசரத் தேவையினை சொல்லி மிகவும் வருந்தியதாகவும் அந்த இடத்தினை பார்க்கச் சென்ற குழுவின் பிரதிநிதிகள் என்னிடம் கூறினார்கள்.
தங்களது அரசியல் நோக்கங்களுக்காக தங்களது அரசியல் இருப்புகளுக்காக மக்களை அசௌகரிய படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை ஒருபோதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதன் கொள்கைகளை வேண்டி நிற்கின்ற தோழர்களும் செய்ய மாட்டார்கள், செய்யவும் கூடாது என்பதுதான் எனது நம்பிக்கை.
அந்தப் பள்ளிவாயல் தொடர்பில் நமக்கு வேறு அபிப்பிராயங்கள் இருக்க முடியும், அந்தப் பள்ளிவாயலின் வாகனத் தரிப்பிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட முறைமை தொடர்பில் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம், அந்தப் பள்ளியின் சொத்துகளின் வக்பு விடயங்கள் தொடர்பில் எமக்கு வேறொரு நிலைப்பாடு இருக்க முடியும், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பில் எமக்கு வேறுபட்ட எண்ணங்கள் இருக்கலாம் அவைகளை மையப்படுத்தி மக்களுக்கான மிக அவசியத்தேவை ஒன்றினை தடை செய்வது அல்லது குழப்பி விடுவது ஒருபோதும் கொள்கையாகாது.
அவர்கள் தொடர்பான பிரச்சனைகளை பார்ப்பதற்கு வேறு வழிகளும் முயற்சிகளும் இருக்கின்றது அதனை அந்த நியாயமான வழிகளிலேயே பார்த்துக் கொள்ள முடியும். என்றோ ஒரு நாள் மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள்.
இன்னொருவரோடு நமக்கு இருக்கின்ற அரசியல் கருத்து வேறுபாடு என்பது ஒருபோதும் நாம் முஸ்லிம் என்ற அடையாளத்தினையோ அல்லது தனிப்பட்ட குரோதங்களாகவோ மாறிவிடக்கூடாது என்பதில் அரசியலில் இருக்கின்ற எல்லோரும் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை நிறுவுவதை அரசியல் பயப்படுத்தி அதனை அரசியலாக்க நினைப்பதை ஒருபோதும் இந்த அரசியல் சிந்தனை ஏற்றுக் கொள்ளாது.
மாற்றங்களுக்காக பயணிக்கின்ற நாம், இணைந்து பயணிக்கின்ற சகோதரர்களை இணைத்துக் கொண்டு மக்கள் சேவையினை வினைத்திறனாக செய்வதற்கு முயற்சிப்போம் அதன் பயன்களை பலாபலன்களை இப்போதாவது இந்த மக்கள் அனுபவித்துக் கொள்ளட்டும்.
என்றும் உங்கள் தோழன்
றசுல்ஷா.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசு என்பதன் அடிப்படையில் தனக்கு வாக்களித்தவர்கள், தனக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோருக்குமாக தனது சேவையினை வழங்க முனைப்புடன் செயப்படுகின்றது..
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 15, 2025
Rating:

கருத்துகள் இல்லை: