Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம்.


 
டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்க சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய மாற்றத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தும் தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்" என்ற தலைப்பில் அலரிமாளிகையில்  (நவம்பர் 14) ஆரம்பமான உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பிரதமர்,

"2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நாட்டில் தொழில்முனைவோர் கலாசாரத்தை உருவாக்குவதற்கும், அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் செயல்பாட்டு ரீதியிலான பங்களிப்பாகும். இந்த வாரமானது நமது தேசிய இலக்குடன் சம்பந்தப்பட்டதாகும். படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியன நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

எமது அரசாங்கத்தின் நோக்கம், எண்ணக்கருக்களை வாய்ப்புகளாக மாற்றி, முதலீடுகளை ஈர்க்கும் புத்தாக்கங்களின் பலன்களை நாட்டு மக்கள் அனுபவிக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதேயாகும். அதற்கு தொழில்முனைவோரின் வளர்ச்சி என்பது மிகவும் அவசியமானதாகும். அதேபோல், பொருளாதாரப் பல்வகைப்படுத்தல், ஏற்றுமதியின் வளர்ச்சி, இளைஞர்களை பலப்படுத்துதல் மற்றும் சமச்சீரான அபிவிருத்தி ஆகியவற்றிற்கும் தொழில்முனைவு அத்தியாவசியமான காரணியாகும்.

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் உலகளாவிய தொழில்முனைவோர் வாரத்தில், 25 மாவட்டங்களிலும் நடைபெற்ற 207க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் 20,000க்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்ள முடிந்தது.

2024ஆம் ஆண்டின் உலகளாவிய புத்தாக்கக் குறியீடின் படி, இலங்கை 89ஆவது இடத்திலேயே இருக்கின்றது. புத்தாக்க உற்பத்திகளின் அடிப்படையில், ஒப்பீட்டு ரீதியில் நாம் நல்ல நிலையில் இருந்த போதிலும், புத்தாக்கத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் நாம் இன்னும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றோம் என்பதைத் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

உலகளாவிய தொழில்முனைவோர் கண்காணிப்பு (GEM) (2024/25) அறிக்கையின்படி, உலகளவில் வயதுவந்தோரில் 49% வீதமானோர் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே தனது தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முன் வருவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு வலுவான ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் மிகவும் முக்கியமானது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

2023ஆம் ஆண்டில் 15-29 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் சனத்தொகை சுமார் 5.1 மில்லியனாக (மொத்த சனத்தொகையில் 23.6%) இருக்கின்றமை இலங்கைக்குச் சாதகமான சனத்தொகை அனுகூலத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இந்த இளைஞர் சமூகம் டிஜிட்டல் அறிவைக் கொண்டிருந்த போதிலும், மூலதனத்தைப் பெற்றுக் கொள்வதில் காணப்படுகின்ற வரையறைகள், குறைந்த வழிகாட்டல்கள், பொதுவாகவே சவால்களை ஏற்பதில் காணப்படும் தயக்கம் போன்ற விடயங்களை நாம் புரிந்துகொண்டிருக்கின்றோம்.

ஆகையினால், அரசாங்கம் குறிப்பாகக் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் 30 பேர் கொண்ட ஒரு டிஜிட்டல் செயற்குழுவை அமைத்து, அனைத்துப் பாடசாலைகளையும் இணையத்தில் இணைத்தல், ஸ்மார்ட் பலகைகள், கணினிகள் மற்றும் டிஜிட்டல் கருவிகளை வழங்குதல், அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஒரு செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன், டிஜிட்டல் கல்விக்கான முழுமையான கொள்கை கட்டமைப்பு 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தயார் செய்யப்பட்டு வருகிறது.

2026ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்முனைவோரை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தி, இளைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான ஆரம்ப நிதிக்காக 1.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இருக்கின்றது.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கணினி ஆய்வுகளுக்காகவும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் (பிராட்பேண்ட் வவுச்சர்), முதலீட்டு ஊக்குவிப்புகளுக்காகவும் மேலதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டிருக்கின்றது. அத்தோடு அரசாங்கம் டிஜிட்டல் பொருளாதாரச் சட்டம் மற்றும் புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகார சபை, இலங்கைக்குத் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை (SL-UDI) மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் செலுத்துகை முறைமைகள் ஆகியவற்றைப் முன்மொழிந்திருக்கின்றது என்பதையும் நான் இத் தருணத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், அனைத்துத் துறைகளினதும் வளர்ச்சிக்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேசியச் செயற்றிட்டத்திற்காகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகச் செயற்படுவதற்குப் பதிலாக, அனைவரையும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசியச் செயல்திட்டத்தினை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

அதேபோல், அரசாங்கம், கைத்தொழில்த் துறை, கல்வித் துறை மற்றும் தொழில்முனைவோர் ஆகிய தரப்புகள் வளங்களை ஒருங்கிணைத்தல், ஆலோசனை வலையமைப்புகளைக் கட்டியெழுப்புதல், கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய சந்தைகளைத் திறத்தல் ஆகியவற்றில் இணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவுப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால ஆகியோரும், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 16, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.