சவூதி அரேபிய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி.
(எம்.ரி.எம்.யூனுஸ்)
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி, சவூதி அரேபிய தூதரகத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கை முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் கிழக்கு மாகாண போட்டி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தில் இடம்பெற்றது.
சவூதி தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வு இவ்வருடம் 3ஆவது தடவையாக இடம் பெறுகிறது.
முழு இலங்கையிலும் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டு முதலாவது சுற்றுப் போட்டி நடைப்பெற்று வருகிறது.
கிழக்கு மாகாண அல் குர்ஆன் மனனப் போட்டியில் மொத்தமாக 898 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
நேற்று (22) ஆண் போட்டியாளர்களுக்கும், இன்று (23) பெண் போட்டியாளர்களுக்கும் போட்டிகள் இடம் பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், கிழக்கு பிராந்திய பொறுப்பாளராக இருந்து போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
இப்போட்டியில் பாடசாலை மாணவர்களும், மத்ரஸா மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றதோடு, போட்டி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் மொத்தம் 2500க்கு மேற்பட்ட ஆண்–பெண் போட்டியாளர்கள் நாடு முழுவதும் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
முதலாவது சுற்றுக்குப் பின் தெரிவு செய்யப்படும் 200 போட்டியாளர்கள்
(ஆண்–100,பெண்–100) எதிர்வரும் டிசம்பர் 20 (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெறும் இரண்டாம் சுற்றில் பங்கேற்கவுள்ளனர்.
அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் (1ம், 2ம், 3ம்) தேர்வு செய்யப்படுவர், இவ்வாறு மொத்தம் 24 பேர்கள் வெற்றி பெறுவார்கள்.
இரண்டாம் சுற்று மற்றும் இறுதி சுற்றுக்கான பரிசுகள் அனைத்தும் சவூதி தூதரகத்தால் வழங்கிவைக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற தேசிய குர்ஆன் மனனப் போட்டியில், முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கு 10 இலட்சம், 7.5 இலட்சம், 5 இலட்சம் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
மேலும், கண் பார்வையற்ற ஒரு பெண் போட்டியாளருக்கும், அவரது பாதுகாவலருக்கும் உம்ரா செய்வதற்கான சிறப்பு அனுமதி சவூதி அரசால் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டும் நிலைமைக்கு ஏற்ப சிறப்பு முடிவுகள் எடுக்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் பிர்னாஸ் தெரிவித்தார்.
முதலாவது சுற்றுக்கான அனைத்து செலவுகளும் சவூதி அரேபிய தூதரகம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து வழங்கிய நிதி பங்களிப்பினால் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சவூதி அரேபிய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 23, 2025
Rating:














கருத்துகள் இல்லை: