Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி - முறையான பஸ் நிலையம் இல்லாத காத்தான்குடி நகரம் — பயணிகளுக்கு பெரும் சிரமம்.



(✍️எம்.பஹத் ஜுனைட்)

வியாபார ரீதியிலும் சுற்றுலாத் துறையிலும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் காத்தான்குடி நகரம், இன்றும் வரை முறையான பஸ் நிலையம் இல்லாமல் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.


தினமும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து வியாபார, வைத்திய, கல்வி போன்ற தேவைகளுக்காக காத்தான்குடி நகரத்தை நோக்கி வருகை தருகின்றனர். அதேசமயம், காத்தான்குடி மக்கள் பலரும் தங்கள் தேவைகளுக்காக பிற நகரங்களுக்கு பயணம் செய்கின்றனர்.


ஆனால், இவ்வளவு மக்கள் வருகை தரும் நகரத்தில் முறையான பஸ் நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.


கிழக்கு மாகாணத்தின் முக்கிய வியாபார மையமாக விளங்கும் காத்தான்குடி நகரத்தில் போக்குவரத்து சீர்மையின்மையால் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவர் கே. எல். பரீட் தெரிவித்ததாவது:

>“வியாபார ரீதியாக நகரத்திற்கு வரும் மக்கள் போக்குவரத்துக்கு முறையான திட்டமிடல் இல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். அபிவிருத்தி அடைந்த ஊர் என சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. அருகிலுள்ள நகரங்களில் பஸ் நிலையங்கள் காணப்படுகின்றன; ஆனால் காத்தான்குடியில் ஒன்றும் இல்லை. சில வருடங்களுக்கு முன் பஸ் நிலையம் அமைக்க முயற்சிகள் எடுத்தும் அது நிறைவேறவில்லை. அதற்கென ஒதுக்கப்பட்ட காணி இருப்பதால் தற்போதைய அரசாங்கம் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு பஸ் நிலையம் ஒன்றை அமைத்துத்தர வேண்டும்” என்றார்.


2007ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நகரசபை தவிசாளரின் முயற்ச்சியில் USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து , முற்சக்கரவண்டி நிறுத்துமிடம், கடைத் தொகுதி, நவீன கழிப்பறை வசதிகளுடனான பஸ் நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது சில அரசியல் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டு வேறு பிரதேசத்திற்க்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இவ்வாறு பயணிகள் இளப்பார்வதற்கான முறையான இடவசதிகள் இல்லாமையால் பயணிகள் பொதிகளுடனும்,கை குழந்தைகளுடனும் வீதியோரங்களில் வெயில்,மழை போன்றவற்றினால் சிரமப்பட்டு வருகின்றனர். அதே போல் பேருந்துகளை நிறுத்துவதற்கு முறையான இடவசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் கூடிய பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுகிறது இதனால் விபத்துக்களும் ஏற்படுகிறது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு பயணிகளும், பேருந்து சாரதிகளும் முகம் கொடுக்க நேரிட்டுவருகிறது.


இவற்றை கவனத்திற்க்கொண்டு காத்தான்குடி நகரத்தின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் முறையான பஸ் நிலையம் அமைப்பது காலத்தின் தேவை என பலரும் வலியுறுத்துகின்றனர்.

எனவே இது தொடர்பில் அரசாங்கமும் அதிகாரிகளும் கவனத்திற்கொண்டு ஒதுக்கப்பட்ட அதே காணியில் நவீன வசதிகளை கொண்ட பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.
காத்தான்குடி - முறையான பஸ் நிலையம் இல்லாத காத்தான்குடி நகரம் — பயணிகளுக்கு பெரும் சிரமம். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 20, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.