2001 -O/L- 2004 A/L பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட KCC கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!
காத்தான்குடி மத்திய கல்லூரியின் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, பாடசாலையின் 2001 OL மற்றும் 2004 AL பழைய மாணவர்களால் கடந்த மூன்றரை வருடங்களாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கடின பந்து கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம், தற்போது பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 செப்டம்பர் முதல் 2026 மார்ச் வரை 2001OL / 2004 AL பழைய பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பு, திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்புடன் இத்திட்டம் மிகச் சிறப்பாக வழிநடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அணியின் எதிர்கால சகல நிர்வாகக் கடமைகளையும் பாடசாலை நிர்வாகமே முன்னெடுக்கும் வகையில், அதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கை கடந்த 2026 ஜூலை 05 அன்று அதிபர் ஏ.எல். சப்ரி அவர்களிடம் செயற்குழுவினால் கையளிக்கப்பட்டது.
பழைய மாணவர்களின் பாரிய கூட்டுமுயற்சியால் குறுகிய காலத்திற்குள் இத்திட்டம் பல முக்கியத்துவமிக்க மைல்கற்களை எட்டியுள்ளது.
1.பழைய மாணவர்களின் நேரடி நிதிப் பங்களிப்பு மற்றும் கட்டணமின்றிய பயிற்சிகள் உள்ளிட்ட சேவைகளின் பெறுமதியையும் உள்ளடக்குமிடத்து, சுமார் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பங்களிப்பு இத்திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
2.பாடசாலையின் 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் முதன்முறையாக இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தில் (SLSCA) வெற்றிகரமாகப் பதிவுசெய்யப்பட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.
3.இத்திட்டத்தின் அதிமுக்கிய அடைவாக, கல்லூரியின் ஒன்பது (09) திறமையான வீரர்கள் மாவட்ட கிரிக்கெட் அணிக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
4.இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் நிதி ஒழுக்கீடுகள் மூலம் மொத்தம் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 நவீன வலைப் பயிற்சி மையங்கள் ( Net practice Courts) அமைக்கப்பட்டன.
5.SLSCA ஊடாக மைதான அபிவிருத்திக்காக மேலும் 3 மில்லியன் ரூபாய் நிதி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
6.தகுதிவாய்ந்த பயிற்றுவிப்பாளர்களின் கீழ் மாணவர்களுக்கு முறையான பயிற்சிகள் தினசரி, வாராந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.
பழைய மாணவர் தொகுதியினரால் பெரும் பொருட்செலவிலும் நேர முதலீட்டிலும் கட்டியெழுப்பப்பட்ட இந்த முக்கியத்துவமிக்க திட்டத்தின் தொடர்ச்சியை, இனிவரும் காலங்களில் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDS), பழைய மாணவர் சங்கம் (PPA) மற்றும் ஆசிரியர்கள் இணைந்து காத்திரமாக முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை இதனை முன்னெடுக்க முழுமையான ஊக்குவிப்பையும் ஆலோசனைகளையும் வழங்கிய முன்னாள் அதிபர்களான எம்.ஏ.சி.எம்.சத்தார், எம்.ஏ.நிஹால் அகமட் மற்றும் தற்போதைய அதிபர் ஏ.எல். சப்ரி ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு நிதியுதவிகள் வழங்கியும், களத்தில் நின்று உழைத்தும் பங்களிப்புச் செய்த 2001 OL / 2004 AL வகுப்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
காத்தான்குடி மத்திய கல்லூரியின் இந்த முக்கியத்துவமிக்க வேலைத்திட்டம் எதிர்காலத்திலும் வெற்றிகரமாகத் தொடர எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
செயற்குழு,
2001 OL / 2004 AL Batch,
காத்தான்குடி மத்திய கல்லூரி.
2001 -O/L- 2004 A/L பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட KCC கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 07, 2026
Rating:









கருத்துகள் இல்லை: