Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

76 ஆண்டு கால கள்ளன், பொலிஸ் விளையாட்டு: நிகவரெட்டிய கூட்டத்தில் அநுர கூறிய குட்டிக்கதை…!


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாபெரும் மக்கள் பேரணி குருணாகல், நிகவரெட்டியில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகத் தமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.


சிறு வயதில் விளையாடும் ‘திருடன் – பொலிஸ் விளையாட்டை உதாரணமாகக் கூறி, நாட்டின் அரசியல் வரலாற்றை மிகவும் எளிய முறையில் அவர் விளக்கினார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்:

“இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத, வீண்விரயம் செய்யாத ஒரு தூய்மையான அரசாங்கம் உருவாகியுள்ளது.

கடந்த காலத்தில் இரு வேறு தரப்பினர் இரு பக்கங்களில் இருந்துகொண்டு நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வந்தனர்.

சிறுவயதில் நாம் கிராமங்களில் ‘திருடன் – பொலிஸ்’ விளையாட்டு விளையாடியது நினைவிருக்கலாம். சிறார்கள் ஒன்று கூடி, பூவா தலையா போட்டுப் பார்த்துச் சிலர் பொலிஸாராகவும், சிலர் திருடர்களாகவும் பிரிந்து விளையாடுவார்கள். திருடர்கள் ஒளிந்துகொள்வார்கள், பொலிஸார் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள்.

அடுத்த நாளும் அதே குழந்தைகள் ஒன்று கூடி மீண்டும் பூவா தலையா போட்டுப் பார்ப்பார்கள். நேற்று பொலிஸாக இருந்தவர் இன்று திருடனாக மாறக்கூடும்; நேற்று திருடனாக இருந்தவர் இன்று பொலிஸாக மாறித் தேடுவார்.

இந்த நாடகத்தனமான ‘திருடன் – பொலிஸ்’ விளையாட்டுதான் கடந்த 76 ஆண்டுகளாக இந்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்தவர்களால் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போதுதான் நாட்டிற்கு உண்மையான பொலிஸார் வந்துள்ளனர்.

தற்போது திருடர்கள் பிடிபடுகிறார்கள்; தீவிர தேடுதல் வேட்டைகளும் விசாரணைகளும் நடைபெறுகின்றன. ஒரு ஊழல்வாதியால் மற்றொரு ஊழல்வாதியைத் தண்டிக்க முடியாது; ஒரு திருடனால் இன்னொரு திருடனுக்குத் தண்டனை வழங்க முடியாது. ஆனால், தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் நம்மால் மட்டுமே இந்த ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர முடியும்” என்றார்.

76 ஆண்டு கால கள்ளன், பொலிஸ் விளையாட்டு: நிகவரெட்டிய கூட்டத்தில் அநுர கூறிய குட்டிக்கதை…! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.