அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் பயனாளிக் குடும்பங்களின் எண்ணிக்கையை 10,975 இலிருந்து 11,500 ஆக அதிகரிப்பதற்கும், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் அதிகபட்ச மூலதன நிதி மானியத்தை 150,000 ரூபாவிலிருந்து 200,000 ரூபாவாக உயர்த்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ், அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெறும் வறிய மற்றும் மிகவும் வறிய பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2025 ஒக்டோபர் 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இதுவரை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 8,660 குடும்பங்களுக்கு மூலதன நிதி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த வங்கியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமும் நிறைவடைந்துள்ளது.
உலக வங்கியின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 07 மாவட்டங்களைச் சேர்ந்த 4,900 குடும்பங்களுக்கு மூலதன நிதி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ், 05 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 6,600 குடும்பங்களுக்கு மூலதன நிதி மானியங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு குடும்ப அலகிற்கும் வழங்கப்படும் நிதி மானியத்தை அதிகரிப்பதற்கும், திட்டத்தின் தரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எதிர்பார்க்கப்படும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இரண்டாம் கட்டத்தின் கீழ் அடையாளம் காணப்படும் தகுதியுடைய பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மூலதன நிதி மானியத்தை 200,000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், பயனாளிக் குடும்பங்களின் எண்ணிக்கையை 11,500 ஆக உயர்த்துவதற்கும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 17, 2026
Rating:

கருத்துகள் இல்லை: