மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு 17 புதிய முகாமைத்துவ உதவியாளர் உத்தியோகத்தர்கள் இணைப்பு
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி, பொதுமக்களுக்கு மிகவும் முறையான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் 17 புதிய முகாமைத்துவ உதவியாளர் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு (12) கௌரவ சுற்றாடல் பிரதி அமைச்சர் திரு. அன்டன் ஜயகொடி அவர்களின் தலைமையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், பணிப்பாளர் நாயகம் திரு. கபில ராஜபக்ஷ மற்றும் அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்கேற்புடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
நிறுவனத்தில் பல வருடங்களாக நிலவிய பதவி வெற்றிடங்களை நிரப்பும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய முறையான ஆட்சேர்ப்புச் செயன்முறையின் ஊடாகத் தகுதியான விண்ணப்பதாரிகள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி தகுதி மற்றும் திறமைகளின் அடிப்படையில் மாத்திரம் இந்நியமனங்கள் வழங்கப்படுவது தற்போதைய அரச சேவைக் கொள்கையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் எனவும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கௌரவ சுற்றாடல் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்தப் புதிய ஆட்சேர்ப்புகளின் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமைக் காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள மாகாண, மாவட்ட காரியாலயங்களின் நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான மனிதவளப் பங்களிப்பு கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் அதிகாரசபையின் அன்றாட நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய மட்டத்தில் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கும் நிலைபேறான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னெடுத்து வரும் பரந்த பணிகளை மேலும் வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு, இந்தப் புதிய உத்தியோகத்தர்களின் செயற்திறன்மிக்க பங்களிப்பு வலுவான பக்கபலமாக அமையும்.
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 14, 2026
Rating:

கருத்துகள் இல்லை: