இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழுவில் (CCC) மேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்புகள்
(எம்.ஐ.அப்துல் நஸார்)
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) நுகர்வோர் ஆலோசனைக் குழுவில் (CCC) மேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நாட்டின் மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துகை மற்றும் நீர் சேவைகள், கீழ்நிலை பெற்றோலியத் தொழில்களுக்கான ஒழுங்குறுத்துகை அமைப்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட்டு வருகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு, பொருத்தமான தரநிலைகள் குறித்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குதல், நுகர்வோர் தேவைகளைக் கண்காணித்தல் மற்றும் நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய முதன்மை நோக்கங்களுக்காகவே இந்நுகர்வோர் ஆலோசனைக் குழு நிறுவப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்குக் குறைந்தவர்களாக இருக்க வேண்டியதுடன், மேல், வடமத்திய அல்லது கிழக்கு மாகாணங்களில் ஏதேனுமொன்றில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். அத்துடன், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்தில் சமூகம் அல்லது சமூக சேவைகளில் பணிபுரிந்த அல்லது தன்னார்வத் தொண்டு செய்ததற்கான நிரூபிக்கப்பட்ட சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும். மேலும், சிங்களம் அல்லது தமிழ் மொழிகளுக்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் பணிபுரியும் திறன் கொண்டிருப்பது மேலதிகத் தகுதியாக எதிர்பார்க்கப்படுகின்றது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் தன்னார்வ மற்றும் சமூக சேவை அனுபவச் சான்றுகள், கிராம உத்தியோகத்தர் வழங்கிய வசிப்பிடச் சான்றிதழ் மற்றும் பிரதேசத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவரால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றுடன், குறித்த மாகாணத்தில் உள்ள நுகர்வோரின் விருத்திக்காக இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார் என்பது பற்றிய 500 சொற்களுக்கு மிகைப்படாத சுருக்கமான கட்டுரை ஒன்றையும் இணைத்து அனுப்புவது கட்டாயமாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026 நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் "தலைவர், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, 06-வது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், இலக்கம் 28, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலதிக விவரங்கள் மற்றும் விதிகளை ஆணைக்குழுவின் இணையத்தளமான www.pucsl.gov.lk மூலமாகவோ அல்லது 011 2392607 / 011 2392608 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் consumers@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழுவில் (CCC) மேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்புகள்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 09, 2026
Rating:

கருத்துகள் இல்லை: