சஜித் அணியும் நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த போகிறதாம்!
”நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சிரமதானத்தின் 2ஆவது பாகத்தை நாம் அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கான ஆரம்பமே நம்பிக்கையில்லாப் பிரேரணையாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்று ஒப்பமிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாடாளுமன்றத்தை சுத்தப்படுவோம் என அறைகூவல் விடுத்தே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். அவர்களால் முன்வைக்கப்பட்ட சிரமதானத்தை நாமே முடித்து வைப்போம்.
நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளவர்கள் பொய்யர்களா, போலி சான்றிதழ்கள் உள்ளவர்களா என தற்போது ஆராய்ந்து வருகின்றோம். நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதற்கான சிரமதானத்தின் இரண்டாம் பாகம் அடுத்தவாரம் ஆரம்பமாகும்.
நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்த வேண்டியுள்ளதால் அடுத்தடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவரக்கூடிய சூழ்நிலை வரக்கூடும்.
நாட்டுக்கு சேவையாற்றுவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் வழங்கப்பட்டுள்ளது. போலி பட்டம் வழங்குவதற்கு அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
நாம் தவறை சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்றார்.

கருத்துகள் இல்லை: